தேனி: இந்த ஆண்டு நீர்நிலைகளை பாதுகாக்கும் 100 பேருக்கு 1 லட்சம் ரூபாய் பணத்துடன் அரசு விருதுகளை வழங்க உள்ளதாக, இன்று (பிப்.03) தேனியில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற சுற்றுச்சூழல் அமைச்சர் மெய்யநாதன் தெரிவித்தார்.
தேனி மாவட்ட தன்னார்வலர்கள் மற்றும் தேனி பனை நடவு குழுவினர் நடத்திய ஆறாம் ஆண்டு தொடக்க விழா நிகழ்ச்சி, அல்லிநகரம் பகுதியில் இன்று நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் சுற்றுச்சூழல் அமைச்சர் மெய்யநாதன் மற்றும் பனை நடும் தன்னார்வ குழுவினர் என ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
இந்த நிகழ்ச்சியில் மஞ்சப்பை உபயோகிப்பது குறித்தும், பனை மரங்கள் நடுவது குறித்தும் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. பின்னர் நிகழ்ச்சியில் பேசிய அமைச்சர் மெய்யநாதன், “சுற்றுச்சூழலைப் பாதுகாக்க அரசு மட்டும் செயல்பட்டால் போதாது. இது போன்ற தன்னார்வல அமைப்புகளும் இணைந்து சுற்றுச்சூழலைக் காக்க வேண்டும். எங்கள் பகுதியில் கஜா புயல் தாக்கியபோது ஏராளமான தென்னை மரங்கள் சாய்ந்தன. ஆனால், ஒரு பனைமரம் கூட புயலில் விழாமல், புயலைத் தடுத்து நிறுத்தியது” எனக் கூறினார்.
இதைத் தொடர்ந்து, இந்த ஆண்டு நீர் நிலைகளை பாதுகாக்கும் சுமார் 100 பேரைத் தேர்ந்தெடுத்து, அவர்களுக்கு ஒரு லட்சம் ரூபாய் பணத்துடன் அரசு விருதுகள் வழங்க உள்ளதாக அமைச்சர் கூறினார். பின்னர்ம் சுற்றுச்சூழலைப் பாதுகாக்க சிறப்பாக செயல்பட்ட தன்னார்வ அமைப்புகளுக்கு அமைச்சர் பதக்கங்களையும், சான்றிதழ்களையும் வழங்கினார்.
இதையும் படிங்க: “கள்ளைக் குடிக்கும் கட்டாயத்தில் நான் இருக்கிறேன்” - அண்ணாமலை