சேலம்: சேலம் மாவட்டம், மேட்டூர் அணை தனது முழுக் கொள்ளளவான 120 அடியை இன்று மாலை எட்டியது. இதனைத் தொடர்ந்து சேலம், ஈரோடு மற்றும் நாமக்கல் ஆகிய மாவட்டங்களில் உள்ள 45 ஆயிரம் ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறும் வகையில் அணையின் கிழக்கு மற்றும் மேற்கு கரை கால்வாய்களில் இருந்து தண்ணீர் திறக்கப்பட்டது. கால்வாய் பாசனத்திற்கான தண்ணீரை மாவட்ட ஆட்சியர் பிருந்தா தேவி திறந்து வைத்தார்.
பின்னர் அவர் கூறுகையில், "சேலம் மாவட்டம், மேட்டூர் அணையில் இருந்து கிழக்கு மற்றும் மேற்கு கரை கால்வாய்களில் பாசனத்திற்காக நீர் திறந்து விட சேலம் நாடாளுமன்ற உறுப்பினர் மற்றும் சேலம் வடக்கு சட்டமன்ற உறுப்பினர் ஆகியோரிடம் விவசாய சங்கங்களைச் சேர்ந்தவர்களும், விவசாய பெருமக்களும் கேட்டுக் கொண்டனர். அதற்கிணங்க, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆணைப்படி இன்று தண்ணீர் திறக்கப்பட்டது.
கிழக்கு மற்றும் மேற்கு கரை கால்வாய்கள் மூலம் இன்று முதல் வரும் டிசம்பர் 13ஆம் தேதி வரை 137 நாட்களுக்கு தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது. மேட்டூர் அணை கால்வாய்களில் ஆகஸ்ட் 1ஆம் தேதி தண்ணீர் திறந்து விட பாசன விதி தொகுப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இருப்பினும், தண்ணீர் இருப்பை கருத்தில் கொண்டு முன்னதாகவே விவசாயப் பணிகளுக்கு தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது. தற்போது வினாடிக்கு 500 கன அடி வீதம் தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது. பிறகு தேவைக்கேற்ப நீர் திறப்பு படிப்படியாக ஆயிரம் கன அடியாக உயர்த்தப்படும்.
மேட்டூர் கிழக்கு மற்றும் மேற்கு கரை கால்வாய்கள் மூலம் முறையே கிழக்கில் 27 ஆயிரம் ஏக்கரும், மேற்கில் 18,000 ஏக்கருமாக மொத்தம் 45 ஆயிரம் பாசன வசதி பெறுகின்றது. இவற்றில் சேலம் மாவட்டத்தில் 16,443 ஏக்கரும், ஈரோடு மாவட்டத்தில் 17,230 ஏக்கரும், நாமக்கல் மாவட்டத்தில் 11,327 ஏக்கர் நிலங்களும் பாசன வசதி பெறும்.
மேட்டூரில் திறக்கப்பட்ட காவிரி நீர் முக்கொம்பு மேலணைக்கு வந்தது. அதன்படி, தற்போதைய நிலவரப்படி முக்கொம்பு அணையின் நீர் வரத்து 5 ஆயிரம் கன அடியாக உள்ளது. அந்த நீர் அப்படியே காவிரி ஆற்றில் வெளியேற்றப்படுகிறது.
விவசாயிகளை வாழவைக்கும் வகையில் முக்கொம்பு வந்தடைந்த நீரை பல்வேறு விவசாய சங்கங்களைச் சேர்ந்தவர்கள் மலர்தூவியும், நெல் விதைகளை தூவியும் வரவேற்றனர். மேலும், காவிரியை வாழ்த்தும் விதமாக வாழ்த்து முழக்கங்களையும் எழுப்பினர். முக்கொம்பு அணையிலிருந்து வெளியேற்றப்படும் தண்ணீர் நாளை அதிகாலை கல்லணை சென்றடையும். அதன்பின் பாசனத்திற்கான தண்ணீர் திறக்கப்பட உள்ளது.
மேலும், பாசன வாய்க்கால்கள் தூர்வாரப்படாததால் கடைமடை வரை தண்ணீர் செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. எனவே, அரசு பாசன வாய்க்கால்களை தூர்வார வேண்டும் மற்றும் ஏரி, குளங்களில் தண்ணீரை சேமித்து வைக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாய சங்கங்கள் கோரிக்கை வைத்தனர்.
இதையும் படிங்க: மூணாறில் நிலச்சரிவு.. கொச்சி டூ உடுமலை, தேனி சாலைகளில் போக்குவரத்து பாதிப்பு! - munnar landslide