சேலம்: கர்நாடகா மற்றும் கேரளா மாநிலங்களில், தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்துள்ளது. இதன் காரணாமக கடந்த சில நாள்களுக்கு முன்னர் கர்நாடக மாநிலத்தில் உள்ள கபினி, கிருஷ்ணராஜ் சாகர் அணைகள் அதன் முழு கொள்ளவை எட்டியது.
இதனை தொடர்ந்து அந்த அணைகளுக்கு வரக்கூடிய உபரி நீர் காவிரி ஆற்றில் திறந்து விடப்பட்டது. இதன் காரணமாக மேட்டூர் அணையானது கடந்த ஜூலை 30ஆம் தேதி அதன் முழு கொள்ளளவான 120 அடியை எட்டியது. இதனை தொடர்ந்து 16 கண் மதகுகள் வழியாக உபரி நீர் திறந்து விடப்பட்டது.
பின்னர் அணைக்கு நீர் வரத்து குறைந்தது. தொடர்ந்து 16 கண் மதகுகள் வழியாக வெளியேற்றப்படும் உபரிநீர் திறப்பதும் நிறுத்தப்பட்டது. இருப்பினும் டெல்டா பாசனத்திற்கு தேவையான தண்ணீர் அணையை ஒட்டி அமைந்துள்ள நீர் மின் நிலையங்கள் வழியாக வெளியேற்றப்பட்டு வந்தது.
இதற்கிடையில் அணைக்கு வரும் தண்ணீரை விட பாசனத்துக்கு திறந்து விடப்படும் தண்ணீரின் அளவு அதிகமாக இருந்ததால் நீர்மட்டம் குறைய தொடங்கியது. அதாவது நேற்று முன்தினம் காலை நிலவரப்படி அணையின் நீர்மட்டம் 119.65 அடியாக இருந்தது. இதனிடையே கர்நாடக மாநிலத்தில் மீண்டும் கன மழை பெய்து வருவதால் அணைக்கான நீர்வரத்து மீண்டும் அதிகரித்துள்ளது. இதனால் மேட்டூர் அணையின் நீர்மட்டம் கிடுகிடுவென உயர்ந்து, இந்தாண்டில் 2வது முறையாக தனது முழு கொள்ளாவன 120 அடியை மீண்டும் எட்டியது.
மீண்டும் திறக்கப்பட்ட 16 கண் மதகுகள்: அணை நிரம்பிய பிறகும் நீர்வரத்து தொடர்ந்து அதிகரித்து வருவதால், உபரி நீர் போக்கியான 16 கண் மதகுகள் வழியாக தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. இன்று காலை 8 மணி நிலவரப்படி, நீர்வரத்து 45 ஆயிரத்து 500 கன அடியாக உள்ளது.
அணையின் நீர் இருப்பு 94.12 டிஎம்சி-யாக உள்ளது. 16 கண் மதகுகள் வழியாக 21 ஆயிரத்து 500 கன அடி நீரும் அணையை ஒட்டி உள்ள நீர் மின் நிலையங்கள் வழியாக 14,000 கன அடி நீரும் திறந்த விடப்பட்டுள்ளது. அணையின் நீர்மட்டம் 120.41 அடியாக உள்ளதாக பொதுப்பணித் துறை அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர்.
தண்ணீர் வரத்து தொடர்ந்து அதிகரிக்கும் பட்சத்தில் காவிரி ஆற்றில் வெள்ளப் பெருக்கு ஏற்பட வாய்ப்புள்ளது எனவே கரையோர மக்கள் பாதுகாப்பாக இருக்க வேண்டும் என அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
இதையும் படிங்க: வயிற்றில் உள்ள குழந்தை ஆணா, பெண்ணா?. தருமபுரியில் மேலும் ஒரு கும்பல் கைது.. கர்ப்பிணிகள் உஷார்..!