சென்னை: தமிழ்நாடு சிலை கடத்தல் தடுப்புப் பிரிவு இயக்குனர் தினகரன் தலைமையில் தனிப்படைகள் அமைக்கப்பட்டு, வெளிநாட்டில் உள்ள தனியார் அருங்காட்சியகங்கள், தனி விற்பனையாளர்கள் நடத்தும் அருங்காட்சியகங்களின் இணையதளங்களில் தமிழ்நாட்டுக்குச் சொந்தமான ஏதேனும் சிலைகள் கடத்தப்பட்டு காட்சிப்பொருளாக வைக்கப்பட்டுள்ளதா என்பதைக் கண்டறிய தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்த நிலையில், வடக்கு மண்டல சிலை கடத்தல் தடுப்புப் பிரிவு காவல் ஆய்வாளர் தமிழ்ச்செல்வி, அமெரிக்காவில் உள்ள சான்பிரான்சிஸ்கோவில் அமைந்துள்ள ஆசிய கலை அருங்காட்சியகத்தில், உலோகத்தாலான சோமாஸ்கந்தர் சிலை காட்சிப்படுத்தப்பட்டிருப்பதைக் கண்காணித்துள்ளார்.
மேலும், இந்த சிலையானது காஞ்சிபுரம் ஏகாம்பரேஸ்வரர் கோயிலைச் சேர்ந்தது என்று அருங்காட்சியகம் நடத்துபவர்கள் இணையதளத்தில் குறிப்பிட்டு இருந்ததும், இதன் காலம் கி.பி.1500 முதல் 1600க்கு உட்பட்ட வெண்கலத்தால் ஆனது என்றும் குறிப்புகள் இருந்ததும் தெரியவந்துள்ளது.
இதுமட்டுமல்லாது, அந்த சிலையின் பீடத்தின் முன் பகுதியில் தெலுங்கு மொழியில் சில குறிப்புகள் எழுதப்பட்டிருந்ததும், அதில் இந்த சிலையானது காஞ்சிபுரம் நகரில் உள்ள ஏகாம்பரநாதர் கோயிலுக்காகச் செய்யப்பட்டது எனவும், இந்த சிலையை தொண்டை மண்டலத்தைச் சேர்ந்த வெங்கடராமநாயனி என்பவரால் கோயிலுக்கு கொடுக்கப்பட்டிருப்பதும் எழுதப்பட்டிருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதனை அடுத்து, இந்த சிலை பற்றிய தகவல்கள் குறித்து சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் விசாரணை மேற்கொண்டதில், இந்த சிலையின் சர்வதேச மதிப்பு சுமார் 8 கோடி ரூபாயாக இருக்கும் என்றும், இந்த சிலையின் அமைப்பு மற்றும் எழுத்துக்களை பார்க்கும்போது 18ஆம் நூற்றாண்டினைச் சேர்ந்ததாக இருக்கும் எனவும் தெரியவந்துள்ளது.
இதையும் படிங்க: மலேசியாவிலிருந்து சென்னைக்கு கடத்தி வந்த 4,900 நட்சத்திர ஆமைகள் பறிமுதல் - இருவர் கைது!
மேலும், சோமாஸ்கந்தர் உலோகச் சிலை காஞ்சிபுரத்தில் உள்ள ஏகாம்பரேஸ்வரர் கோயிலில் இருந்து அடையாளம் தெரியாத மர்ம நபர்களால் திருடப்பட்டு, பின்பு அமெரிக்காவில் உள்ள சான்பிரான்சிஸ்கோவில் அமைந்துள்ள ஆசிய கலை அருங்காட்சியகத்தில் சர்வதேச கடத்தல்காரர்களின் உதவியுடன் விற்கப்பட்டிருக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இத்தகையச் சூழலில், இது குறித்து வழக்குப் பதிவு செய்து, சட்டவிரோதமாக இந்த சோமாஸ்கந்தர் உலோகச் சிலையை அமெரிக்காவிற்கு கடத்திய நபர்களைக் கண்டறியவும், இந்தச் சிலையை தமிழ்நாட்டிற்கு மீட்டு வருவதற்கும் சிலை கடத்தல் தடுப்பு பிரிவு அதிகாரிகள் நடவடிக்கைகள் எடுத்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
ஈடிவி பாரத் தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்