தஞ்சாவூர்: கும்பகோணம் அருகேயுள்ள சுவாமிமலை மற்றும் திருவலஞ்சுழி பகுதிகள் திருக்கோயில்களுக்குத் தேவையான ஐம்பொன் சிலைகள் தயார் செய்வதில் உலக அளவில் பிரசித்தி பெற்றவையாகும். இங்கு, சிங்கப்பூரைச் செதுக்கிய சிற்பி என அழைக்கப்படும் சிங்கப்பூரின் முறைந்த முன்னாள் பிரதமர் லீ குவான் யூ சிலை உருவாக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாடு மற்றும் தமிழக மக்களின் வளர்ச்சி மற்றும் வேலைவாய்ப்பு பெறுவதில் பெரிதும் உறுதுணையாக செயல்பட்டவர் எனக் கருதப்படும் லீ குவான் யூவால், தமிழர்கள் இன்றளவும் சிங்கப்பூரில் தொழிலதிபர்களாகவும், எண்ணற்ற நிறுவனங்களில் உயர் பதவிகளிலும் பணி செய்து வருகின்றனர்.
இந்நிலையில், தமிழகத்தைச் சேர்ந்த சிங்கப்பூர் தொழிலதிபரான கருணாநிதி, தனது வளர்ச்சி மற்றும் நிறுவன வளர்ச்சிக்கும் உறுதுணையாக இருந்த மறைந்த பிரதமரின் நினைவைப் போற்றி புகழ்ந்திடும் வகையில், அவரது முழுவுருவ வெண்கலச் சிலையினை வடிவமைத்து தனது சிங்கப்பூர் அலுவலகத்தில் நிறுவ திட்டமிட்டுள்ளார்.
இதனையடுத்து, கும்பகோணம் அருகேயுள்ள திருவலஞ்சுழியில் உள்ள சாய் கணேஷ் சிற்பக் கூட ஸ்தபதிகளான வேதா இராமலிங்கம் மற்றும் அவரது மகன் வேதாச்சலம் ஆகியோரிடம் இதற்கான பணியினை கடந்த ஆண்டு 2023 டிசம்பர் மாதம் ஒப்படைத்துள்ளார் கருணாநிதி.
தற்போது இந்த முழுவுருவ வெண்கலச்சிலை உருவாக்கம் வேதா டெம்பிள் ஒர்க்ஸ் நிறுவனம் வாயிலாக ஆறு மாத உழைப்பில், 6 அடி உயரம், இரண்டு அடி அகலம், 150 கிலோ எடையில் 2.5 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் நிறைவு பெற்றுள்ளது. இது இன்று மாலை சென்னைக்கு அனுப்பி வைக்கப்படுகிறது. பின்னர், அங்கிருந்து சிங்கப்பூர் கொண்டு சென்று தொழிலதிபர் கருணாநிதியின் நிறுவனத்தில் நிறுவப்படவுள்ளது.
அதே நேரத்தில், சிங்கப்பூர் தொழிலதிபர் கருணாநிதியின் சென்னை அலுவலகத்தில் நிறுவ, இதே சிற்ப கூடத்தில் தெற்காசியாவைக் கட்டியாண்ட சோழ மாமன்னன் இராஜராஜனின் முழுவுருவ வெண்கலச் சிலை உருவாக்கவும் பணித்திருந்தார். இந்த சிலையும் தற்போது 7.5 அடி உயரம், 2.5 அடி அகலம், 350 கிலோ எடையில் ரூபாய் 4.5 லட்சம் மதிப்பீட்டில் உருவாகியுள்ளது என்பது குறிப்பிடதக்கது.