தஞ்சாவூர்: தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியர் பிரியங்கா பங்கஜம் மனநலம் பாதிக்கப்பட்டவர்கள் நலனில் தனிகவனம் செலுத்தி வருகிறார். அவர்களை மீட்டு மனநல சிகிச்சைக்கு ஏற்பாடு செய்து, மறுவாழ்வு கிடைப்பதற்கான ஏற்பாட்டை முன்னெடுத்து வருகிறார். அதன்படி, பணி நிமித்தமாக மாவட்டத்தின் பல பகுதிகளுக்கும் செல்லும்போது சாலைகளில் கண்படும் மனநலம் பாதிக்கப்பட்டவர்களை, சம்பந்தப்பட்ட துறை மூலமாக மீட்டு மறுவாழ்வு பெற வழிவகை செய்து வருகிறார்.
மாவட்ட ஆட்சியரகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பின்படி, கடந்த செப்டம்பர் 8 ஆம் தேதி மாவட்ட ஆட்சியர் பிரியங்கா பூதலூர் தாலுகாவில் ஆய்வு பணி மேற்கொண்டுள்ளார். அப்போது, பூதலூர் செங்கிப்பட்டி சாலையில் உள்ள புதுப்பட்டியில் 40 வயதுமிக்க நபர் மனநலம் பாதிக்கப்பட்ட நிலையில் இருந்துள்ளார். இதனையடுத்து, இந்தியன் ரெட்கிராஸ் சொசைட்டி (indian red cross society) உதவியுடன் அந்த நபரை மீட்டு தஞ்சாவூர் ராசா மிராசுதார் மருத்துவமனையில் இயங்கி வரும் மனநலம் பாதிக்கப்பட்டவர்களுக்கான மீட்பு மையத்தில் சேர்த்துள்ளனர். மீட்பு மையத்தில் அலுவலர்களும் அந்த நபருக்கு முறையான சிகிச்சை அளித்துள்ளனர்.
இது தொடர்பாக ஈடிவி பாரத்திடம் பேசிய இந்தியன் ரெட் கிராஸ் சொசைட்டியின் தஞ்சாவூர் மாவட்ட துணை சேர்மனான என்ஜினியர் முத்துக்குமார்," மனநலம் பாதிக்கப்பட்டவர்களுக்கான அவசர சிகிச்சை மற்றும் மீட்பு மையத்தில் சேர்க்கப்பட்ட போது, அவர் பேசும் மனநிலையில் இல்லை. தொடர்ந்து மனநல மருத்துவர் ஆலோசனையின் படி மருந்துகள் வழங்கப்பட்டன. அவர் தெலுங்கு மொழி பேசியதால் அவருக்கு தொடர்ந்து கவுன்சிலிங் வழங்க இயலவில்லை.
இந்நிலையில் அரசு ராஜா மிராசர் மருத்துவமனையில் செவிலியராக பணியாற்றி வரும் லெனின் பாரதி என்ற பெண்ணுக்கு தெலுங்கு தெரியும் என்பதால் அவருடைய உதவியை நாடினோம். சிகிச்சை அளிக்கப்பட்டு ஒரு மாத காலத்திற்கு பின்பாக தான் அந்த நபர் தனது ஊர் மற்றும் தகப்பனார் பெயரை தெரிவித்தார். அந்தத் தகவலை கொண்டு ஆந்திர மாநிலம் அனந்தபூர் மாவட்டத்தில் உள்ள காவல் நிலையத்திற்கு தகவல் கொடுக்கப்பட்டது.
அவர்கள் அந்த கிராமம் புக்ராய சமுத்திரம் காவல் நிலைய எல்லைக்கு உட்பட்டது என்ற தகவலை தெரிவித்து அதன் அடிப்படையில் தொடர்ந்து அந்த காவல் நிலையத்திற்கு இந்த நபர் குறித்த விபரங்கள் கொடுக்கப்பட்டு விசாரித்து தெரிவிக்குமாறு கேட்டுக் கொள்ளப்பட்டது. அதன் அடிப்படையில் அவருடைய கிராமம் மற்றும் பெற்றோர் குறித்த விபரங்களை காவல்துறையினர் தெரிவித்தனர்.
இதனைத் தொடர்ந்து சில நாட்களில் புக்ராய சமுத்திரம் பகுதியில் உணவு கடை நடத்தி வந்த திண்டுக்கல் மாவட்டத்தைச் சார்ந்த மணி என்பவர் எங்களை தொடர்பு கொண்டார். அவருக்கு தமிழ் தெரியும் என்பதனால் இங்கு உள்ள நிலைமை அவருக்கு எடுத்துக் கூறப்பட்டது அந்த அடிப்படையில் அவர் சம்பந்தப்பட்ட பெற்றோர்கள் மற்றும் உறவினர்களுடன் தஞ்சாவூருக்கு வந்து மாவட்ட ஆட்சியர் உடைய அனுமதி பெற்று குஜல்லா பிரசாத்தை அழைத்து சென்றனர்." என என்ஜினியர் முத்துக்குமார் விளக்கம் அளித்தார்.
இதையும் படிங்க: ஓடும் ரயில் படுக்கை சரிந்து சிறுவன் படுகாயம்.. நாகர்கோவில் - கோவை ரயிலில் அதிர்ச்சி!
நேற்று (16.10.2024) தஞ்சாவூரில் குஜல்லா பிரசாத்தை பெற்றோரிடத்தில் ஆட்சியர் ஒப்படைத்துள்ளார். மகனை பார்த்ததும் பெற்றோர்கள் அவரை கண்ணீர்மல்க ஆரத்தழுவிக் கொண்டனர். இதனைப்பார்த்தவர்கள் அனைவரும் கண்கலங்கியுள்ளனர். சாலையில் சுற்றித்திரிந்த தங்களது மகனை பாதுகாப்பாக மருத்துவமனையில் அனுமதித்து, உடல் நலத்தில் முன்னேற்றம் அடையச் செய்த தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியருக்கு அவர்களது குடும்பத்தினர் நன்றியை தெரிவித்துள்ளனர்.
இதன் பின்னர், தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியர், குஜல்லா பிரசாத்துக்கு புத்தாடை மற்றும் இனிப்புகளை வழங்கி பெற்றோருடன் அனுப்பி வைத்தார். இந்நிகழ்வில், மயிலாடுதுறை எம்பி சுதா, மாவட்ட மனநல மருத்துவர் சித்ராதேவி, இந்தியன் ரெட்கிராஸ் சொசைட்டி பூதலூர் கிளை திருமாறன், பாபநாசம் கிளை சேர்மன் சரவணன், விவேகானந்தன், அவசர சிகிச்சை மற்றும் மீட்பு மைய ஒருங்கிணைப்பாளர் மனோஜ் குமார் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.