சென்னை: ஒடிசாவில் பாஜக சார்பில் தேர்தல் பிரச்சாரக் கூட்டம் நடைபெற்றது. இதில் பங்கேற்ற பிரதமர் மோடி, புரி ஜெகந்நாதர் கோயிலின் பொக்கிஷ அறை சாவி காணாமல் போன விவகாரம் குறித்து பேசினார். அதில், நமது வீட்டு சாவி காணாமல் போனால் ஜெகந்நாதரிடம் முறையிடலாம். ஆனால், ஜெகந்நாதர் கோயில் பொக்கிஷ அறையின் சாவியை 6 ஆண்டுகளாக காணவில்லை. இந்த சாவி தமிழ்நாட்டுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக மக்கள் கூறுகின்றனர் என்றார் பிரதமர்.
தமிழகத்தின் மதுரையைச் சேர்ந்த முன்னாள் ஐஏஎஸ் அதிகாரி வி.கே.பாண்டியன் பிஜேடி கட்சியின் முக்கியத் தலைவராக உருவெடுத்துள்ள நிலையில், அவரது பெயரைக் குறிப்பிடாமல் பிரதமர் மறைமுகமாக சாடினார். தமிழர்களைக் குறிக்கும் விதமாக பிரதமர் மோடி இவ்வாறு பேசியதற்கு முதலமைச்சர் ஸ்டாலின் கடும் கண்டனங்களை தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து சமூக வலைத்தளங்கள் மூலமாக கருத்து தெரிவித்த மு.க ஸ்டாலின், “தமிழகத்தில் தேர்தல் முடிந்ததும் தனது தமிழ்ப் பற்றாளர் வேடத்தைக் கலைத்துவிட்டார் பிரதமர் மோடி. ஒடிசாவில் உள்ள புரி ஜெகந்நாதர் கோயிலின் சொத்துகளைக் களவாடும் திருடர்கள் போலத் தமிழர்கள் மீது பொய்ப்பழி சுமத்தியிருக்கிறார்.
வடக்கில் தமிழர்களைக் காழ்ப்புணர்வுடன் தூற்றுவதும், மாநிலங்களுக்கிடையே குரோதத்தைத் தூண்டுவதும் ஒரு பிரதமருக்கு அழகா? வாக்குகளுக்காக, தான் வகிக்கும் பொறுப்பின் கண்ணியத்தை மறந்து, நாளுக்கு நாள் இவ்வளவு தரக்குறைவாக நடந்துகொள்வதை பிரதமர் நிறுத்திக்கொள்ள வேண்டும்” என்று பதிவிட்டுள்ளார்.
இந்நிலையில், ஒடிசா தேர்தல் பரப்புரையில் தமிழர்களை திருடர்கள் போல விமர்சித்த பிரதமர் மோடிக்கு எதிராக சென்னையில் உள்ள முக்கிய இடங்களில் மீம்ஸ் போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளன.
அதில், ''தமிழ்நாட்டிற்கு வருவான்... தமிழ் மொழியின் பெருமையை பேசுவான்... திருவள்ளுவரை தெய்வம் என சொல்லுவான்..
கர்நாடாக போவான்... காவேரி பிரச்சனையை தூண்டுவான்... ஒடிசாவில் தமிழர்களை திருடர்கள் என சொல்லுவான். உலக மகா நடிகன் அவன் யார்?'' என கேட்டு சென்னை உயர்நீதிமன்ற வழக்கறிஞர் ஹேமந்த் அண்ணாதுரை என்பவர் பெயரில் சென்னையின் முக்கிய இடங்களில் போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளன. ஏற்கெனவே இவர் பல முறை தமிழக ஆளுநரையும், மத்திய அமைச்சர்களையும் கண்டித்து சென்னை முழுவதும் போஸ்டர் அடித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: நீ இப்படி தான் இருப்பியா?" AI மூலம் கிடைத்த காணாமல் போன குழந்தையின் படம் - தவிக்கும் பெற்றோர்!