மதுரை: மேலூரைச் சேர்ந்த மணிகண்டன் என்பவர் உயர்நீதிமன்றம் மதுரை கிளையில் மனு ஒன்றைத் தாக்கல் செய்திருந்தார். அதில், "மதுரை மாவட்டம், மேலூர் தாலுகா, கவட்டையம்பட்டியைச் சேர்ந்தவர் சேகர். இவர் மேலவளவு கிராமத்தில் உள்ளாட்சித் தேர்தலில் ஊராட்சி மன்ற தலைவராக வெற்றி பெற்ற பட்டியலின வகுப்பைச் சேர்ந்த முருகேசன் உள்ளிட்ட ஆறு பேரைக் கொலை செய்யப்பட்ட வழக்குகளில் தொடர்புடையவர்.
மேலும், இந்த வழக்கில் ஆயுள் தண்டனை பெற்று சிறையில் இருந்து பின்னர் நன்னடத்தை விதிகளின் அடிப்படையில் சிறையில் இருந்து முன் விடுதலை செய்யப்பட்டார். இவர் மீது மேலவளவு மற்றும் மேலூர் காவல் நிலையத்தில், தற்போது மேலும் 3 வழக்குகள் உள்ளது. இந்த நிலையில், தொடர்ந்து பட்டியலின வகுப்பைச் சேர்ந்த மக்களை மிரட்டி சாதிய வன்கொடுமையில் ஈடுபட்டு வருவதாகவும், 2023ஆம் ஆண்டு பட்டியல் இனத்தைச் சார்ந்தவர்களை ஆயுதத்தால் தாக்கிய வழக்கில் காவல்துறையால் கைது செய்யப்பட்டு மதுரை சிறையில் சேகர் உள்ளார்.
ஆகவே, இவரை ஆயுள் தண்டனையில் இருந்து நன்னடத்தை விதியின் அடிப்படையில் சிறையில் இருந்து முன் கூட்டி விடுவித்ததை ரத்து செய்ய வேண்டும்" என மனுவில் கூறியிருந்தார். இந்த மனு நீதிபதிகள் ஜெயச்சந்திரன் மற்றும் குமரப்பன் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது.
அப்போது விசாரணை மேற்கொண்ட நீதிபதிகள், இந்த மனு குறித்து சிறையில் இருக்கும் சேகருக்கு சிறைத்துறை மூலமாக நீதிமன்றத்திற்குப் பதிலளிக்கவும் மற்றும் தமிழக அரசு பதிலளிக்கவும் உத்தரவிட்டு வழக்கு விசாரணை ஒத்திவைத்து உத்தரவு பிறப்பித்துள்ளனர்.
இதையும் படிங்க: வளர்ப்பு மகளை பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்த ராணு வீரர் கைது.. மதுரை பகீர் சம்பவம்!