சென்னை: சென்னை பெரம்பூர் பகுதியில் நேற்று இரவு பகுஜன் சமாஜ் கட்சியின் தமிழ்நாடு தலைவர் ஆம்ஸ்ட்ராங்கை 8 பேர் கொண்ட கும்பல் வெட்டிப் படுகொலை செய்தது. இதையடுத்து செம்பியம் காவல்துறையினர் 10 தனிப்படைகள் அமைத்து மர்ம கும்பலை தேடி வந்தனர். இந்த நிலையில், எட்டு நபர்கள் தாமாக சரணடைந்த நிலையில், அவர்களை கைது செய்த போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டனர்.
இந்த விசாரணையில், ஆற்காடு சுரேஷ் கொலைக்கு பழி தீர்க்கும் வகையில் இந்த கொலை நடைபெற்றதாக அவர்கள் வாக்குமூலம் அளித்தனர். இதையடுத்து, ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள ஏற்கனவே கடந்த ஆண்டு ஆம்ஸ்ட்ராங் உதவியால் கொலை செய்யப்பட்ட ஆற்காடு சுரேஷின் சகோதரர் ஆற்காடு பாலு, ராமு, திருவங்கடம், திருமலை, செல்வராஜ், மணிவண்ணன், சந்தோஷ் மற்றும் அருள் ஆகிய எட்டு பேரிடம் நடத்தப்பட்ட விசாரணையில் பல்வேறு திதிக்கிடும் தகவல்கள் வெளியாகின.
மேலும், வெகு நாட்களாக ஆம்ஸ்ட்ராங்கை நோட்டமிட்டு இவர்கள் கொலை செய்ததும், பழிக்குப்பழி இந்த கொலைச் சம்பவம் அரங்கேற்றப்பட்டதும் விசாரணையில் தெரியவந்தது. இந்த நிலையில், கைது செய்யப்பட்ட 8 பேரையும் செம்பியம் போலீசார் தீவிரமாக விசாரணை செய்து வந்த நிலையில், அவர்களை மருத்துவ பரிசோதனை செய்வதற்கு சென்னையில் உள்ள அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர்.
அப்போது, ஏதாவது அசம்பாவிதம் நடைபெறும் என்பதால் இவர்களை சென்னை புறநகர் பகுதியில் குரோம்பேட்டை பகுதியில் உள்ள அரசு மருத்துவமனைக்கு மருத்துவப் பரிசோதனைக்காக தற்போது அழைத்து வந்துள்ளனர். இதனால் குரோம்பேட்டை மருத்துவமனை வெளிப்புற பகுதிகளில் அதிகப்படியான போலீசார் பாதுகாப்பு பணியில் குவிக்கப்பட்டுள்ளனர்.
மேலும், போலீஸ் பாதுகாப்புடன் காவல்துறை வாகனத்தில் மருத்துவ பரிசோதனைக்கு எட்டு பேரையும் போலீசார் அழைத்து வந்துள்ளனர். தொடர்ந்து, போலீஸ் பாதுகாப்புடன் மருத்துவமனையில் பரிசோதனையை முடித்துக் கொண்டு அவர்களை பலத்த பாதுகாப்புடன் காவல்துறை வாகனத்தில் அழைத்துச் சென்றுள்ளனர்.
இதையும் படிங்க: பிபிஜி சங்கர் முதல் ஆம்ஸ்ட்ராங் வரை.. இரண்டாண்டில் தமிழ்நாட்டை உலுக்கிய அரசியல் கொலைகள்!