சென்னை: சைதாப்பேட்டை அபித் காலனியில் வசிக்கும் பிகார் மாநில தொழிலாளியான ராஜேஷ்குமாரின் மகன் உவராஜ், வயிற்றுப்போக்கால் பாதிக்கப்பட்டு உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்நிலையில், சிறுவனின் தங்கைக்கும் பாதிப்பு ஏற்பட்ட நிலையில், மெட்ரோ தண்ணீரில் கழிவுநீர் கலந்தது மட்டுமே சிறுவனின் உயிரிழப்புக்குக் காரணம் என அப்பகுதி மக்கள் குற்றம்சாட்டினர்.
அதன் அடிப்படையில், அந்த சிறுவனின் வீட்டை சோதனை செய்தபோது பழைய சாதம் மற்றும் மாசடைந்த குடிநீர் இருந்துள்ளதை பார்த்த சென்னை குடிநீர் வாரிய அதிகாரிகள், குடிநீர் மாசடைந்துள்ளதா என்று அனைத்து இடங்களிலும் கடந்த ஒரு வாரமாக சோதனை செய்து வருகின்றனர்.
மேலும், நீரை பருகியதால் சிறுவனுக்கு இறப்பு ஏற்பட்டதா? என்று உணவு பாதுகாப்பு துறை அலுவலர்கள் ஆய்வு செய்த நிலையில், சிறுவன் கெட்டுப்போன உணவை உண்டதால் உடல் பாதிக்கப்பட்டு இறந்துள்ளார் என மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார்.
இந்த நிலையில் பொது சுகாதாரம் மற்றும் நோய்தடுப்புத் துறை இயக்குநர் செல்வவிநாயகம் ஈடிவி பாரத்திற்கு அளித்துள்ள சிறப்பு பேட்டியில், “மழைக்காலம் வயிற்றுப் போக்கு ஏற்படுவதுற்கான வாய்ப்புகள் உள்ள காலமாகும். அதனால் தான் குடிநீரின் தரத்தை கிராமங்கள், நகரங்கள் என அனைத்து இடங்களிலும் எடுத்து பரிசோதனை செய்வோம். பாதுகாக்கப்பட்ட குடிநீர் வழங்கப்படுவதை உறுதிச் செய்து விடுவோம்.
குழந்தைகளுக்கு வயிற்றுப் போக்கு ஏற்பட்டால் அவர்களுக்கு சிகிச்சை அளிப்பதற்காக உடனுக்குடன் ஒஆர்எஸ் பவுடர், ஜிங் மாத்திரை 5 வயதிற்குட்பட்ட குழந்தைகளுக்கு வழங்குவதற்காக முன்கூட்டியே கொடுப்போம். குழந்தைகளுக்கான மாத்திரைகளை கொடுக்கும் முகாமை மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் நாளை (திங்கள்கிழமை) துவக்கி வைக்கிறார்.
குழந்தைகள் உள்ள வீட்டில் தாய்மார்களிடம் 2 ஒஆர்எஸ் பவுடர், ஜிங் மாத்திரை கொடுத்து வைப்பதுடன், அதனை பயன்படுத்துவது குறித்தும் அவர்களுக்கு கற்றுக் கொடுக்கப்படும். மேலும் அதனை பயன்படுத்தும் முறையும் பாக்கெட்டில் அச்சிடப்பட்டிருக்கும். எனவே தேவைப்படும்போது உடனுக்குடன் கொடுத்துக் கொள்ளலாம். அனைத்து நீர்நிலைகள், குடிநீர் விநியோகம் செய்யும் இடங்கள் உட்பட கிராமப் பஞ்சாயத்து முதல் மாநகராட்சி வரையில் உள்ள தண்ணீரை ஆய்வுக்கு எடுப்போம்.
தினமும் 1.5 லட்சம் லிட்டர் தண்ணீரை எடுத்து தரத்தை ஆய்வு செய்து, அதுகுறித்து உடனுக்குடன் உள்ளாட்சி அமைப்பிற்கு தெரிவிப்போம். சைதாப்பேட்டையில் சிறுவன் இறந்தது குறித்து மாநகராட்சி அதிகாரிகள் ஆய்வு செய்து அறிக்கை அளிப்பார்கள். இதுகுறித்து அச்சப்படத் தேவையில்லை. பாட்டிலில் விற்கப்படும் குடிநீர் குறித்து உணவு பாதுகாப்புத் துறை அதிகாரிகள் ஏற்கெனவே பரிசோதனை செய்து ஆய்வு செய்து வருகின்றனர். பொது மக்களுக்கு உள்ளாட்சி நிர்வாகம் மூலம் அளிக்கப்படும் தண்ணீரையும் எடுத்து பரிசோதனை செய்து வருகிறோம்” என்று செல்வவிநாயகம் தெரிவித்தார்.