சென்னை: ஆண்டுதோறும் ஏப்ரல் 15-ஆம் தேதி முதல் ஜூன் 14-ஆம் தேதி வரை 61 நாட்களுக்கு, கன்னியாகுமரி முதல் திருவள்ளூர் வரையிலான கிழக்குக் கடற்கரைப் பகுதியில் விசைப் படகுகள் மூலம் மீன்பிடிக்கத் தடைவிதிக்கப்பட்டு வருகிறது. அதன்படி இன்று (திங்கட்கிழமை) முதல் மீன்பிடி தடைக்காலம் அமலுக்கு வந்தது.
ஆண்டுதோறும் இந்த தடைக் காலத்தில் விசைப் படகுகள் மூலம் மீன்பிடிப்பதை நிறுத்திவிடுவர். இவை மீன்பிடித் துறைமுகங்களில் நிறுத்தப்படும். இந்த காலக் கட்டத்தில் படகு, வலைகள் சீரமைக்கும் பணிகளை மீனவர்கள் மேற்கொள்வர். அதேநேரத்தில் கடலோர கிராமங்களில் இருந்து குறுகிய தூரம் செல்லக்கூடிய வகையில் ஃபைபர் படகு, கட்டுமரம் மூலம் தினமும் மீன்பிடித்தலில் மீனவர்கள் ஈடுபடுவர்.
ஏற்றுமதி தரத்தினாலான மீன்கள் இக்காலக்கட்டத்தில் கிடைக்காது. சிறிய வகை மீன்களே சந்தைக்கு விற்பனைக்கு கொண்டு வரப்படும் இதனால் மீன், இறால், நண்டு உள்ளிட்டவைகளின் விலை கணிசமாக உயரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
அதேநேரத்தில் சென்னை காசிமேடு மீன் சந்தையில் கடந்த வாரத்தில் ஆயிரத்து 300 ரூபாய் வரை விற்கப்பட்ட வஞ்சிரம் தமிழ்ப் புத்தாண்டு நாளான நேற்று 800 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டும் கூட அதனை வாங்க ஆட்கள் இல்லை என வியாபாரிகள் தெரிவித்தனர்.
இதையும் படிங்க: உலக மீனவர் தினம்: மீன்பிடித் தொழிலில் மீனவர்கள் படும் இன்னல்கள், அரசுக்கு வைக்கும் கோரிக்கை என்ன?