கரூர்: கரூர் - சேலம் தேசிய நெடுஞ்சாலையில் திருச்செந்தூரில் இருந்து சேலம் நோக்கி சுற்றுலா பேருந்து ஒன்று சென்று கொண்டிருந்தது. இப்பேருந்தை ஈரோடு மாவட்டம், மொடக்குறிச்சியைச் சேர்ந்த ராஜா என்பவர் ஓட்டி வந்துள்ளார். இந்நிலையில், பேருந்து நள்ளிரவு சுமார் 1 மணியளவில் மண்மங்கலம் அருகே சென்று கொண்டிருந்த போது, புதிய மேம்பாலப் பணிகள் அமைக்கப்பட்டிருந்த தற்காலிக சாலையில் பழுதாகி நின்றுள்ளது.
அதனையடுத்து பேருந்தை பழுதுபார்க்க, கரூரில் வசித்து வரும் நாமக்கல் மாவட்டம் பாண்டமங்கலம் பகுதியைச் சேர்ந்த நித்தியானந்தம்(50) மற்றும் மோகனூர் பகுதியைச் சேர்ந்த பெரியசாமி(46) ஆகியோர் வந்துள்ளனர். இதற்கிடையே, பேருந்தில் பயணம் செய்து வந்த பயணிகள், மாற்றுப் பேருந்து மூலம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.
அதைத் தொடர்ந்து, அதிகாலை 5 மணியளவில் பேருந்தை பழுது பார்த்துக் கொண்டிருந்த போது, அதே திசையில் திருநெல்வேலியில் இருந்து மும்பை நோக்கி பிளாஸ்டிக் கழிவுகளை ஏற்றிக்கொண்டு சென்ற லாரி, எதிர்பாராதவிதமாகப் பேருந்தின் பின்புறமாக மோதியுள்ளது. அதில், பேருந்தை பழுதுபார்த்துக் கொண்டிருந்த மெக்கானிக் நித்தியானந்தம் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.
மேலும், இந்த விபத்தில் பெரியசாமி மற்றும் லாரி ஓட்டுநர் ஜெயபாண்டி இருவரும் படுகாயங்களுடன் மீட்கப்பட்டு, தனியார் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வருகின்றனர். பேருந்து ஓட்டுநர் ராஜா மட்டும் காயங்களின்றி தப்பியுள்ளார். தற்போது, கரூர் - சேலம் தேசிய நெடுஞ்சாலையில் அதிகாலையில் ஏற்பட்ட இந்த விபத்தால், கிட்டத்தட்ட 1 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
இதற்கிடையே, சம்பவம் குறித்து தகவலறிந்து வந்த போலீசார், உயிரிழந்த நித்தியானந்தம் உடலை மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை மேற்கொண்டனர். மேலும், இந்த விபத்து குறித்து பேருந்து ஓட்டுநர் ராஜா அளித்த புகாரின் பேரில், லாரி ஓட்டுநர் ஜெயபாண்டி மீது வழக்குப்பதிவு செய்துள்ள போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.
தற்போது, சுற்றுலா சென்ற பயணிகள் மாற்றுப் பேருந்தில் அனுப்பி வைக்கப்பட்டதால் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பியுள்ளனர். மேலும், இந்த விபத்துக்கு நெடுஞ்சாலை மேம்பாலப் பணிகள் மேற்கொண்டு வரும் ஒப்பந்த நிறுவனமும், அப்பகுதியில் பணியிலிருந்த நெடுஞ்சாலை போக்குவரத்து போலீசாரின் கவனக் குறைவும் தான் காரணம் எனக் கூறப்படுகிறது.
இதையும் படிங்க: சென்னை மெட்ரோ கழிவுநீர் தொட்டியில் இளைஞரின் சடலம்! போலீஸ் விசாரணை!