திருவண்ணாமலை: திருவண்ணாமலை தெற்கு மாவட்ட மதிமுக கட்சியின் சார்பில் நாடாளுமன்றத் தேர்தல் நிதி வழங்கும் விழா இன்று திருவண்ணாமலை நடைபெற்றது. இந்த கூட்டத்தில் அதிமுக முதன்மைச் செயலாளர் துறை வைகோ பங்கேற்று உறுப்பினர்களிடம் கலந்துரையாடினார்.
நிகழ்ச்சிக்குப் பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்து துரை வைகோ பேசுகையில், “2014 ஆம் ஆண்டு ஆட்சிக்கு வந்த பாரதிய ஜனதா அரசு இதுவரை விவசாயிகளின் எந்தவித கோரிக்கைகளையும் நிறைவேற்றவில்லை. மாறாகக் கடந்த 9 ஆண்டுகளில் 2.5 லட்சம் விவசாயிகள் தற்கொலை செய்து கொண்டு உள்ளார்கள். விவசாயிகள் தாங்கள் விளைவிக்கும் விளைபொருள்களுக்குக் குறைந்தபட்ச ஆதார விலையைக் கூட பாஜக ஆட்சி தர மறுக்கிறது.
விவசாயிகளின் வாழ்வாதாரத்தை நசுக்கும் வகையில் மூன்று வேளாண் மசோதாக்களைக் கொண்டு வந்த அரசு பாஜக அரசு. விவசாயிகளுக்குக் கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றாத காரணத்தினால் தான் தற்போது விவசாயிகள் தலைநகரை நோக்கிப் படையெடுத்து வருகிறார்கள். போராட்டம் நடத்தும் விவசாயிகளின் மீது கண்ணீர்ப் புகைக் குண்டுகளை வீசுவதை நீதிமன்றம் கண்டித்துள்ளது.
இந்த தேர்தலில் விவசாயிகள் பிரச்சனைகள் தேர்தலில் பிரதிபலிக்கும். கர்நாடகாவில் பாஜக காங்கிரஸ் மற்றும் எந்த அரசு ஆட்சிக்கு வந்தாலும் காவிரியிலிருந்து தமிழகத்துக்கு உண்டான பங்கீட்டு நீரைத் தராமல் வஞ்சித்து வருகிறது. பாஜக எதிர்ப்பு நிலையை அதிமுக எடுத்திருப்பது தேர்தலுக்காகவே என மக்கள் சந்தேகிக்கிறார்கள்.
மாநிலத் தலைவர் அண்ணாமலை சராசரி அரசியல்வாதியாக நடந்து கொள்வதில்லை. அவருடைய அரசியல் நடவடிக்கைகள் அறிக்கைகள் ஆகியவை மிகப்பெரிய ஏமாற்றத்தை அளிக்கிறது. அரசியல் கட்சிகள் ஜாதி மற்றும் மதத்தைச் சார்ந்த அரசியலை நடத்தி வருகிறது. அரசியல் இயக்கங்கள் மக்களுக்கான வாழ்வாதார அரசியலை மட்டுமே பேச வேண்டும்.அத்தியாவசிய பொருட்களின் விலைகள் பல மடங்கு உயர்ந்துள்ளது.
இதற்கு முக்கிய காரணம் எரிபொருட்களின் விலை உயர்ந்தது தான். அரசியல் தலைவர்கள் மேடைகளில் சாதியைப் பற்றி மதத்தைப் பற்றிப் பேசுவதைப் பொதுமக்கள் எப்போது தட்டி கேட்கிறார்களோ அப்போது தான் அரசியலில் மாற்றம் ஏற்படும். தற்போதைய சூழ்நிலையில் தமிழகத்தில் ஒரு தொகுதியிலாவது அண்ணாமலை தேர்தலில் நின்று வெற்றி பெறட்டும். அப்போது பாஜக வளர்ந்துள்ளது என்பதை நாங்கள் ஏற்போம்.
சென்ற முறை ஒரு லோக்சபா உறுப்பினர் இடத்தையும் மற்றும் ஒரு ராஜ்யசபா இடத்தையும் அளித்தனர். இந்த முறை ஒரு தொகுதியைக் கூடுதலாக மதிமுக கேட்டுள்ளது. அனைத்து இயக்கங்களும் கூடுதலாக இடங்களைக் கேட்டுள்ள நிலையில், அடுத்த கட்ட பேச்சுவார்த்தைகளில் முடிவு தெரியும். விஜய் பாஜகவின் அழுத்தத்தால் கட்சி ஆரம்பித்தாரா என்பது அவர் முழுமையான அரசியலுக்கு வந்து அவரது கொள்கைகளைச் சொல்லும் போது தான் தெரியும். அதுவரை அவருக்கு அரசியல் சாயம் பூசுவது என்பது தவறான ஒன்று” என்றார்.
இதையும் படிங்க: இளைஞர்களுக்கு குட் நியூஸ்.. திருச்சியில் புதிய ஐடி பார்க் திறப்பு..!