மயிலாடுதுறை: தமிழ்நாட்டில் முன்பு எப்போதும் இல்லாத வகையில், கோடை வெயில் கொளுத்தி வருகிறது. இந்த நிலையில், கத்தரி வெயில் எனப்படும் 'அக்னி நட்சத்திரம்' மே 4 (நேற்று) முதல் மே28 ஆம் தேதி வரை நீடிக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் 'கள்ளக் கடல்' எனும் நிகழ்வு இன்றும், நாளையும் ஏற்பட வாய்ப்பு உள்ளதால் தமிழ்நாட்டில் கடலோர மாவட்டங்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இந்தியப் பெருங்கடலின் தெற்கு பகுதியில் சில நேரங்களில் திடீரென எந்தக் குறிப்பும் இன்றி பலத்த காற்று ஏற்பட்டு கடல் சீற்றம் அடையும். இந்த நிகழ்வைத்தான் 'கள்ளக் கடல்' நிகழ்வு என்று அழைக்கிறோம்.
- அதன்படி கன்னியாகுமரி, திருநெல்வேலி,ராமநாதபுரம் மற்றும் தூத்துக்குடி மாவட்ட கடலோர பகுதிகளுக்கு கடல் கொந்தளிப்பு காரணமாக சிவப்பு நிற எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
- சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களுக்கு ஆரஞ்சு நிற எச்சரிக்கை கொடுக்கப்பட்டுள்ளது.
- விழுப்புரம், கடலூர், நாகப்பட்டினம் ஆகிய மாவட்டங்களுக்கு மஞ்சள் நிற எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இந்தநிலையில் மயிலாடுதுறை மாவட்ட மீனவர்கள் மற்றும் பொதுமக்கள் எச்சரிக்கையுடன் இருக்குமாறு மயிலாடுதுறை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கே.மீனா அறிவுறுத்தியுள்ளார்.
இதுகுறித்து, அவர் வெளியிட்ட செய்திக்குறிப்பில், "இந்திய வானிலை ஆய்வு மையம் தமிழ்நாட்டில் கடலோர மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட் எச்சரிக்கை விடுத்துள்ளது. கடலில் 45 முதல் 65 கிலோ மீட்டர் வேகத்துடன் கூடிய காற்று வீசக்கூடும், கடல் கொந்தளிப்புடன் 1.5 மீட்டர் உயரத்திற்கு கடல் அலை எழும்பக்கூடும் என்பதால் மீனவர்கள் கடலுக்குள் மீன் பிடிக்கச் செல்ல வேண்டாம்.
கரையோரம் பாதிப்புகள் ஏற்படும் என்பதால் கடலில் பொதுமக்கள் யாரும் குளிக்கச் செல்ல வேண்டாம். காற்றின் வேகத்தால் படகுகள் சேதமடையக்கூடும் என்பதால் மீனவர்கள் படகுகளை பாதுகாப்பாக நிறுத்தி வைக்குமாறு" தெரிவித்துள்ளார்.
இதைத்தொடர்ந்து மாவட்டத்தில் உள்ள 28 கடலோர மீனவ கிராமங்களில் மீனவர்கள் தங்கள் படகுகளை பாதுகாப்பாக நிறுத்தும் பணியில் ஈடுபட்டுள்ளனர். மீன் பிடி தடைக்காலம் அமலில் உள்ளதால் விசைப்படகு மற்றும் ஆழ்கடல் மீனவர்கள் கடலுக்கு செல்லாத நிலையில் கரையோர மீன்பிடி தொழிலும் இன்றுடன் நிறுத்தப்பட்டது. இதனால், அடுத்த அறிவிப்பு வரும் வரை மயிலாடுதுறை மாவட்ட மீனவர்கள் மீன்பிடி தொழில் முற்றிலும் நிறுத்தப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: சபரிமலையில் ஸ்பாட் புக்கிங் கிடையாது.. அடுத்த சீசனில் நடக்கப்போவது என்ன?