மயிலாடுதுறை: மயிலாடுதுறை தருமபுரம் ஆதீனமாக மடாதிபதி 27-வது குருமகா சந்நிதானம் ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாசாரிய சுவாமிகள் இருந்து வருகிறார். இந்நிலையில், ஆதீனத்தின் ஆபாச ஆடியோ, வீடியோ இருப்பதாகக் கூறி பணம் கேட்டு மிரட்டியதாக கடந்த பிப்ரவரி மாதம் மயிலாடுதுறை போலீசார், மயிலாடுதுறை மாவட்ட பாஜக தலைவர் அகோரம் உள்ளிட்ட 9 பேர் மீது வழக்குப்பதிவு செய்தனர்.
அதன்படி, அகோரம், ஆடுதுறை வினோத், விக்னேஷ், செம்பனார்கோயில் கலைமகள் கல்வி நிறுவனங்களின் தாளாளர் குடியரசு, ஸ்ரீநிவாஸ் ஆகிய 5 பேரை கைது செய்து சிறையில் அடைத்தனர். இவர்கள் 90 நாட்கள் சிறையில் இருந்த நிலையில் ஜாமீனில் வெளியே வந்தனர். இந்த நிலையில், இவ்வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட மேலும் நான்கு பேரை போலீசார் தேடி வந்தனர்.
இந்த நிலையில், தலைமறைவாக இருந்த இரண்டாவது நபராக இவ்வழக்கில் குற்றம் சாட்டப்பட்டு நான்கு மாதம் தலைமறைவாக இருந்த தருமபுரம் ஆதீனத்தின் நேர்முக உதவியாளர் செந்தில், உத்திரபிரதேசம் மாநிலம் வாரணாசியில் இருப்பதாக மயிலாடுதுறை போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. இதனையடுத்து, மயிலாடுதுறை சிறப்பு தனிப்படை போலீசார் வாரணாசிக்குச் சென்று செந்திலை கைது செய்துள்ளனர்.
மேலும், மயிலாடுதுறை மாவட்ட அமர்வு நீதிமன்றத்தில் செந்தில் முதல் முறையாக முன்ஜாமீன் கேட்டு மனு கோரியிருந்தார். இதில் அரசுத் தரப்பு வழக்கறிஞர் ராமசேயோன் செந்திலை கைது செய்து விசாரணை நடத்த வேண்டும் என வாதிட்டதால், முன் ஜாமின் மனுவை தலைமை குற்றவியல் நீதிபதி மாயகிருஷ்ணன் தள்ளுபடி செய்தார்.
இதையும் படிங்க: கோவையில் குழந்தைகளை விற்ற ஹோட்டல் தம்பதி.. தீவிரமாகும் வழக்கு.. ஆந்திராவுக்கு விரையும் போலீஸ்!