மயிலாடுதுறை : மயிலாடுதுறை மாவட்டம், குத்தாலம் அரசு பொது மருத்துவமனையில், மயிலாடுதுறை காங்கிரஸ் எம்எல்ஏ ராஜ்குமார் மருத்துவத்துறை அதிகாரிகளுடன் ஆய்வு மேற்கொண்டார். அங்கு கட்டப்பட்டு வரும் கட்டடப் பணிகள், தீவிர சிகிச்சை பிரிவு, அறுவை அரங்கம் பகுதியில் ஆய்வு மேற்கொண்டபோது காங்கிரஸ் எம்எல்ஏ ராஜகுமார் செல்போனில் எடுக்கப்பட்ட லைவ் வீடியோ எம்எல்ஏவின் முகநூல் பக்கத்தில் பதிவிடப்பட்டது.
அந்த வீடியோவில், செவிலியர் ஒருவர் காலணிகளை எடுத்து கீழே போட்ட போது எம்எல்ஏ காலணிகளை அணிந்து கொண்டு உள்ளே சென்ற காட்சிகள் வீடியோவில் பதிவாகி இருந்தன. இந்த வீடியோவைப் பார்த்த பாஜக மூத்த தலைவர் ஹெச்.ராஜா இதற்கு கண்டனம் தெரிவித்து, தனது எக்ஸ் பக்கத்தில் பதிவு ஒன்றை பதிவிட்டுள்ளார்.
அந்த பதிவில், 'தூய்மை பணிகளுக்கு பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் பாத பூஜை செய்து அவர்களை கெளரவிக்கும் காணொளியை நாம் அனைவரும் பார்த்திருக்கிறோம். பள்ளி குழந்தைகளுக்கு உத்தர பிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் அவர்கள் பாத பூஜை செய்து அவர்களுக்கு நற்பண்புகள் குறித்து உபதேசிக்கும் காணொளியை நாம் அனைவரும் பார்த்திருக்கிறோம்.
தூய்மை பணிகளுக்கு பாரத பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் பாத பூஜை செய்து அவர்களை கெளரவிக்கும் காணொளியை நாம் அனைவரும் பார்த்திருக்கிறோம்.
— H Raja (@HRajaBJP) November 22, 2024
பள்ளி குழந்தைகளுக்கு உத்தர பிரதேச முதலமைச்சர் திரு.யோகி ஆதித்யநாத் அவர்கள் பாத பூஜை செய்து அவர்களுக்கு நற்பண்புகள் குறித்து உபதேசிக்கும்… pic.twitter.com/Aps6o0wtKw
ஆனால் அரசு மருத்துவமனை செவிலியர் ஒருவரை தனது காலணியை எடுத்து தனது கால் பாதத்தின் அருகில் வைக்க வைத்த காங்கிரஸ் கட்சியை சேர்ந்த சட்டமன்ற உறுப்பினர் ஒருவரின் மோசமான செயலை பாருங்கள். மயிலாடுதுறை மாவட்டம், குத்தாலம் பேரூராட்சி அரசு பொது மருத்துவமனைக்கு சென்ற மயிலாடுதுறை சட்டமன்ற தொகுதி உறுப்பினரும், மயிலாடுதுறை மாவட்ட காங்கிரஸ் தலைவருமான ராஜ்குமார் MLA அவர்கள் அங்கு பணியில் இருந்த செவிலியர் ஒருவரை தனது செருப்பை எடுக்க வைத்து தனது கால் பாதத்தின் அருகில் வைக்கச் செய்த வேதனைக்குரிய நிகழ்வைத்தான் இந்த காணொளியில் நாம் அனைவரும் பார்க்கிறோம்.
மாதர் தம்மை இழிவு செய்யும் மடமையை கொளுத்துவோம் என்ற மகாகவி பாரதியார் பிறந்த மண்ணில் ஒரு பெண்ணுக்கு நிகழ்ந்த இந்த செயல் வன்மையாக கண்டிக்கத்தக்கது. பெண்களை எப்படி மதிக்க வேண்டும் என்று சோனியாகாந்தி அவர்கள் காங்கிரஸ் நிர்வாகிகளுக்கு கற்றுத் தரவில்லை போலும்' என பதிவிட்டிருந்தார்.
இச்சம்பவம் குறித்து எம்எல்ஏ ராஜ்குமார் விளக்கம் அளித்து கூறுகையில், "பாஜக மூத்த தலைவர் ஹெச்.ராஜா சமூக வலைதள பக்கத்தில் பதிவிட்ட முழுமையான வீடியோவில் அந்தப் பார்ட் மட்டும் கட் பண்ணி மலிவு அரசியல் காரணமாக பதிவிட்டுள்ளார்.
இதையும் படிங்க : "சென்னை-மயிலாடுதுறை இன்டர்சிட்டி ரயில் சேவை" எம்.பி.சுதா கோரிக்கை!
குத்தாலம் மருத்துவமனையில் பொதுப்பணித்துறை சார்பில் கட்டப்பட்டு வரும் கட்டடங்களை ஆய்வு செய்ய சென்றேன். அறுவை சிகிச்சை அரங்கம், தீவிர சிகிச்சைப் பிரிவில் உள்ள குறைபாடுகள் குறித்து பார்ப்பதற்காக செல்லும்போது அங்கு செல்வதற்கு காலணிகளை மாற்றி மருத்துவமனையில் கொடுக்கப்படும் காலணிகளை அணிந்து செல்வது விதிமுறை.
மருத்துவமனையில் வழங்கக்கூடிய காலணிகளை எடுத்து செவிலியர் கீழே போட்டார் இதுதான் நிகழ்ந்தது. நான் உள்ளே செல்லும்போது காலணியை கழற்றி விட்டு செல்வதும் செவிலியர் காலணியை செல்பில் இருந்து எடுத்து கீழே போடுவதும் அந்த வீடியோவிலே உள்ளது.
மக்கள் பிரச்சனைக்கு அரசு சார்ந்த பணிகளில் ஆய்வு செய்து நடவடிக்கை எடுப்பதற்காக செல்வது இயல்பான நிலையில், அரசியல் சட்டங்கள் தெரியாமல் புரிதல் இல்லாமல் அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாக பாஜக மூத்த தலைவர் ஹெச்.ராஜா மலிவு அரசியல் செய்வதாக" தெரிவித்தார்.
ஈடிவி பாரத் வாட்ஸ்அப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்