மயிலாடுதுறை: மேற்கு வங்க மாநிலம் கொல்கத்தாவில் உள்ள ஆர்.ஜி.கர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் பணியாற்றிய பெண் பயிற்சி மருத்துவர் கடந்த 9-ஆம் தேதி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு, கொல்லப்பட்டார். இந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.
இந்த சம்பவத்தைக் கண்டித்து மருத்துவர்கள், மருந்தாளுநர்கள் மற்றும் மாணவர்கள் என பலரும் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதனைத் தொடர்ந்து பெண் மருத்துவரின் கொலைக்கு நீதிகேட்டு நாடு தழுவிய அளவில் 24 மணி நேர வேலைநிறுத்த நடத்தப்படும் என இந்திய மருத்துவ சங்கம் அறிவித்தது.
அதன்படி இன்று நாடு முழுவதும் மருத்துவர்கள் பலர் தங்களது வேலையைப் புறக்கணித்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அந்த வகையில், மயிலாடுதுறை மாவட்ட தலைமை மருத்துவமனையான அரசு பெரியார் மருத்துவமனையில் இந்திய மருத்துவ கழகம் மற்றும் தமிழ்நாடு அரசு மருத்துவ சங்கம் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இந்திய மருத்துவக் கழக கிழக்கு மண்டலத் தலைவர் வீரபாண்டியன் தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில், மத்திய சுகாதார பாதுகாப்பு சட்டத்தை அமல்படுத்த வேண்டும். மருத்துவமனை வளாகங்களை பாதுகாக்கப்பட்ட பகுதியாக அறிவித்துப் பாதுகாப்பு நடவடிக்கைகளை ஏற்படுத்த வேண்டும்.
முதுகலை பெண் பயிற்சி மருத்துவர் பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்தவர்களுக்கு உரிய தண்டனை வழங்க வேண்டும், உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி பதாகைகள் ஏந்தி கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
குறிப்பாக அரசு மருத்துவர்கள் புறநோயாளி சிகிச்சைப்பிரிவு பணியை 1 மணிநேரம் புறக்கணித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் மருத்துவமனைக்கு வந்த நோயாளிகள் அவதியடைந்தனர். இருப்பினும் அவசர சிகிச்சைப் பிரிவு வழக்கம் போல் செயல்பட்டது.
இந்திய மருத்துவக் கழக சங்கம் அறிவித்தபடி இன்று காலை 6 மணியிலிருந்து நாளை காலை 6 மணி வரை புறநோயாளிகள் சிகிச்சையை மட்டும் புறக்கணித்து மருத்துவர்கள் போராட்டத்தில் ஈடுபட உள்ளதாக அறிவித்துள்ளனர். அதே போல் மயிலாடுதுறையில் மாவட்டத்தில் உள்ள, குத்தாலம், தரங்கம்பாடி, சீர்காழி ஆகிய தாலுகாக்களில் உள்ள தனியார் மருத்துவர்களும் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வருவதால் நோயாளிகள் கடுமையான சிரமத்திற்கு உள்ளாகி வருகின்றனர்.
இதையும் படிங்க: நெல்லையில் இரட்டை கொலை: கோயில் திருவிழாவில் ஏற்பட்ட தகராறில் இளைஞர் வெறிச்செயல்!