மயிலாடுதுறை: காவிரியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டால், காவிரி ஆற்றில் பிரியும் கொள்ளிடம் ஆற்றில் உபரிநீர் திறந்து விடப்படுகிறது. இந்த கொள்ளிடம் ஆறு திருச்சி, தஞ்சை, கடலூர், அரியலூர், மயிலாடுதுறை ஆகிய 5 மாவட்டங்களில் குடிநீர் தேவைகளை பூர்த்தி செய்கிறது. கொள்ளிடம் ஆறு, மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே காட்டூர் என்ற இடத்தில் கடலில் கலக்கிறது.
கொள்ளிடம் ஆற்றில் அதிக அளவு ஏற்படும் வெள்ளப்பெருக்கை தடுத்து நிறுத்தி உபயோகப்படுத்தவும், கடல் நீர் உட்புகாமல் தவிர்க்கவும், மயிலாடுதுறை மாவட்டம் குமாரமங்கலம் - கடலூர் மாவட்டம் ஆதனூர் இடையே கொள்ளிடம் ஆற்றில் கதவணை அமைக்கப்படும் என்று கடந்த 2014ஆம் ஆண்டு 110 விதியின் கீழ் அப்போதைய முதலமைச்சர் ஜெயலலிதாவால் அறிவிக்கப்பட்டது.
அதனைத் தொடர்ந்து, ரூ.465 கோடியே 45 லட்சம் மதிப்பீட்டில் கதவணை கட்டும் பணிகள் கடந்த 2019ஆம் ஆண்டு துவங்கியது. 0.334 டிஎம்சி தண்ணீரை தேக்கும் வகையில், 82 மதகுகள் அமைக்கப்பட்டு, இரண்டு மாவட்டங்களுக்கு இடையே போக்குவரத்திற்கு வழிவகுக்கும் வகையில் கதவணைப் பாலம் கட்டப்பட்டு வருகிறது.
98 சதவீதம் பணிகள் நிறைவடைந்த நிலையில், எஞ்சிய இறுதி கட்டப் பணிகள் மிகவும் காலதாமதமாக நடைபெற்று வருவதாக குற்றச்சாட்டு எழுந்தது. இந்நிலையில், இன்று (மே 15) கதவணைப் பணிகள் குறித்து மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் மகாபாரதி நேரில் ஆய்வு செய்தார். தொடர்ந்து, திட்ட வரைபடத்தைக் கொண்டு பணிகளின் முன்னேற்றம் குறித்து அதிகாரிகளிடம் கேட்டறிந்தார்.
அதனைத் தொடர்ந்து, நரி முடுக்கு வாய்க்கால் நீரொழிங்கி மற்றும் தெற்கு ராஜன் வாய்க்கால் நீரொழிங்கி கட்டப்பட்டு வருவதை பார்வையிட்டார். இப்பணிகள் நிறைவுற்றால், மயிலாடுதுறை மாவட்டத்தில் மயிலாடுதுறை மற்றும் சீர்காழி பகுதியில் 6,320 ஏக்கர் விளைநிலங்களும், கடலூர் மாவட்டத்தில் காட்டுமன்னார்கோயில் மற்றும் சிதம்பரம் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள 16,313 ஏக்கர் விளைநிலங்களும் பயன்பெறும் என்பது குறிப்பிடத்தக்கது.
நீரோழிங்கி கட்டுமானப் பணிகள் காரணமாக அப்பகுதியில் உள்ள தண்ணீர் டேங்க் இடிக்கப்படும் சூழ்நிலை இருப்பதால், அதற்கு அருகிலேயே வேறொரு தண்ணீர் டேங்க் அமைத்து தர வேண்டும் என ஆட்சியரிடம் அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்தனர்.
அப்போது அதிகாரிகள் முயற்சி செய்வதாக தெரிவித்த நிலையில், முயற்சி எல்லாம் செய்யக்கூடாது, நாம்தான் மக்களுக்கு செய்து தர வேண்டும் என அறிவுறுத்தினார். தொடர்ந்து தண்ணீர் டேங்க் அமைத்து தரப்படும் என மாவட்ட ஆட்சியர் பொதுமக்களிடம் உறுதி அளித்தார்.
இதையும் படிங்க: “மீனவர் நலன் காக்க உருவாக்கப்பட்ட சங்கத்தை முடக்கிய ஊழல் அரசு திமுக” - அண்ணாமலை கடும் தாக்கு! - Annamalai About GO No 66