மயிலாடுதுறை: தருமபுரம் ஆதீனம் 27வது குருமகா சன்னிதானத்தின் ஆபாச ஆடியோ, வீடியோ இருப்பதாகக் கூறி பணம் கேட்டு மிரட்டிய புகாரில், அவரது சகோதரர் விருத்தகிரி, கடந்த பிப்ரவரி 25ஆம் தேதி கொடுத்த புகாரின் பேரில், மயிலாடுதுறை மாவட்ட பாஜக தலைவர் அகோரம் உட்பட 9 பேர் மீது வழக்குப்பதிவு செய்து போலீசார் கைது செய்தனர்.
இதில் பாஜக மாவட்டத் தலைவர் அகோரம் திருச்சி சிறையில் அடைக்கப்பட்டிருந்தார். கைது செய்யப்பட்ட வினோத், விக்னேஷ், செம்பனார்கோவில் கலைமகள் கல்வி குழுமத்தின் தாளாளர் குடியரசு, ஸ்ரீநிவாஸ் ஆகியோர் கடந்த மாதம் ஜாமீனில் வெளிவந்தனர்.
இந்நிலையில், பாஜக மாவட்ட தலைவர் அகோரம் உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட ஜாமீன் மனு ஏற்றுக் கொள்ளப்பட்டு, நேற்று நிபந்தனை ஜாமீன் வழங்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து, இன்று திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டிருந்த பாஜக மாவட்டத் தலைவர் அகோரம் ஜாமீனில் விடுவிக்கப்பட்டார். இதனையடுத்து, மயிலாடுதுறைக்கு வந்த பாஜக மாவட்டத் தலைவர் அகோரத்திற்கு கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் மாலை அணிவித்து வரவேற்பு அளித்தனர்.
பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்து அவர் கூறுகையில், “தருமபுரம் ஆதீனத்திதை கடந்த நான்கு மாதங்களுக்கு முன்பு நான் மிரட்டியதாக பொய் வழக்கு பதிவு செய்தனர். பட்டணப்பிரவேசம் நடத்தக்கூடாது என்று திமுக அரசு தடை விதித்தபோது, 24 மணிநேரம் இரவு, பகல் பாராமல் உழைத்து பட்டணப்பிரவேசத்தை நடத்திக் காட்டினேன். அதன் பிறகு சீர்காழி சட்டைநாதர் கோயிலில் 642 செப்பேடுகள், 13 ஐம்பொன் உலோக சிலைகள் கண்டெடுக்கப்பட்டபோது இந்த நிர்வாகத்திற்கும், தருமை ஆதீனத்திற்கும் ஆதரவாக ஒத்துழைப்பாக இருந்தேன்.
பாஜகவும், நாங்களும் ஆன்மீகத்திற்கு எதிராக இருக்கமாட்டோம். என் மீது சுமத்தப்பட்டது வீண்பழி. நான் எவ்விடத்திலாவது வார்த்தை தவறாக பேசியிருந்தால், ஆடியோ, வீடியோ ஏதாவது கிடைத்திருந்தால், எவ்வளவு தொலைக்காட்சி இருக்கிறது, அதனை செய்தியாக வெளியிட வேண்டியது” என்றார்.
மேலும், “என் மீது போடப்பட்ட பொய் வழக்கு குறித்து நடவடிக்கை எடுக்க நான் ஜனாதிபதியையும், தமிழக கவர்னரையும் சந்திக்க உள்ளேன். என் மீது வழக்கு போட்டவன் சத்தியமாக எவ்வளவு பெரிய கொம்பனாக இருந்தாலும் சரி அவனை காலி பண்ணாமல் விடமாட்டேன். சட்டப்பூர்வமாகத்தான், என் உயிரே போனாலும் சரிதான். ஆனால், தவறான செய்தியை எழுப்பியவர்கள் எல்லாம் மன்னிப்பு கேட்கனும், வேதனை படனும், வெட்கப்படணும்” என்றார்.
தொடர்ந்து பேசிய அவர், “இந்த வழக்கில் கைது செய்யப்படாமல் இருக்கும் நான்கு பேரை கைது செய்ய போராட்டம் வைத்திருக்கிறேன். திமுகவில் முக்கிய பிரமுகர் இருக்கிறார். குடியரசு அதிமுகவில் உள்ளவர். ஜெயச்சந்திரனை நான் கண்ணால் கூட பார்த்தது கிடையாது. ஆடியோ எடுத்ததாகச் சொல்லப்படும் பிரபாகரன் மற்றும் நேர்முக உதவியாளர் செந்தில் பிடித்தால் உலகமே சிரிப்பாய் சிரிக்கும்.
ஒரு தவறும் செய்யாமல் 90 நாட்கள் சிறையில் இருந்திருக்கிறேன். அந்த நான்கு குற்றவாளிகளும் கண்டிப்பாக பிடிக்க வேண்டும். நடுரோட்டில் நிறுத்த வேண்டும். யார் தவறு செய்தார்கள், யார் வீடியோ எடுத்தார்கள், என்ன நடந்தது என்று தெரிய வேண்டும்” இவ்வாறு அவர் கூறினார்.
இதையும் படிங்க: எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி? காங்கிரஸ் செயற்குழு கூட்டத்தின் தீர்மானம் என்ன? - Rahul Gandhi