தஞ்சாவூர்: நாடாளுமன்ற மக்களைவைத் தேர்தல் ஏப்ரல் 19ஆம் தேதி நடைபெற உள்ள நிலையில், தமிழ்நாட்டில் தேர்தல் பிரச்சாரம் சூடுபிடிக்கத் தொடங்கியுள்ளது. இதனையொட்டி, அனைத்து அரசியல் கட்சி வேட்பாளர்கள், கட்சி நிர்வாகிகள் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டுள்ளனர்.
அதுமட்டுமின்றி, தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள், மக்களின் மனதில் இடம் பிடிப்பதற்காக, கறி வெட்டுவது, தோசை, வடை, பூரி சுடுவது, டீ போடுவது என வித்தியாசமான முறையில் ஈடுபட்டு வாக்கு சேகரித்து வருகின்றனர். அந்த வகையில், அதிமுக மயிலாடுதுறை நாடாளுமன்றத் தொகுதி வேட்பாளர் பாபு, இன்று கும்பகோணம் கிழக்கு ஒன்றியம் அம்மாசத்திரம் பகுதியில் உள்ள சுந்தரமூர்த்தி விநாயகர் கோயிலில் வழிபாடு செய்துவிட்டு பிரச்சாரத்தை தொடங்கினார்.
அதிமுக மற்றும் கூட்டணிக் கட்சி நிர்வாகிகளுடன், இரட்டை இலை சின்னத்திற்கு வாக்கு வேண்டி, திறந்த வாகனத்தில் வீதி வீதியாகச் சென்று தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். அதனைத் தொடர்ந்து, நெசவாளர்கள் அதிகம் வசிக்கும் பகுதியில் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.
அப்போது, கைத்தறி பட்டு நெசவாளர் வீட்டிற்குச் சென்ற அவர், தறியில் அமர்ந்து பட்டு சேலை நெசவு செய்து வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். வேட்பாளரின் இந்த செயல் அப்பகுதி மக்களை வியப்பில் ஆழ்த்தியது. பின்னர், அவர் கட்சி நிர்வாகிகளுடன் தொடர்ந்து கும்பகோணம் கிழக்கு ஒன்றிய பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்டு, மாலை சோழபுரத்தில் இன்றைய பிரச்சாரத்தை நிறைவு செய்கிறார்.