தஞ்சாவூர்: கும்பகோணத்தில் நடைபெறும் மகாமகப் பெருவிழா உலக பிரசித்தி பெற்றதாக விளங்கி வருகிறது. இந்த விழா 12 ஆண்டுகளுக்கு ஒரு முறை மட்டுமே நடைபெறும். கடைசியாக 2016ஆம் ஆண்டு நடைபெற்றது. அடுத்த மகாமகம் 2028-இல் நடைபெறும். இதை தவிர்த்து, ஒவ்வொரு ஆண்டும் மாசி மக பெருவிழா 10 நாட்களுக்கு சிறப்பாக நடைபெறுவது வழக்கம்.
அதேபோல, இந்த ஆண்டும் மாசி மக விழா கடந்த 15ஆம் தேதி அன்று கொடியேற்றத்துடன் கோலாகலமாகத் துவங்கியது. நாள்தோறும் காலை, மாலை என இருவேளைகளும் சாமி திருவீதியுலா நடைபெற்று வந்தது.
இவ்விழாவின் முக்கிய நிகழ்ச்சியாக மாசி மகத்துடன் கூடிய பௌர்ணமி நன்னாளில், இன்று காசி விஸ்வநாதர், அபிமுகேஸ்வரர் கௌதமேஸ்வரர், வியாழ சோமேஸ்வரர், காளஹஸ்தீவரர், ஏகாம்பரேஸ்வரர், பாணபுரீஸ்வரர், நாகேஸ்வரர், திருக்கோடீஸ்வரர், அமிர்தகலசநாதர் ஆகிய 10 சிவாலயங்களில் இருந்து மகாமக குளத்தின் நான்கு கரைகளிலும், தனித்தனி ரிஷப வாகனங்களில் சிறப்பு மலர் அலங்காரத்தில் எழுந்தருளினர்.
பின்னர் அஸ்திர தேவருக்கு மஞ்சள் பொடி, மாப்பொடி, திரவியப் பொடி, பஞ்சாமிர்தம், பால், தயிர், சந்தனம் உள்ளிட்ட பல்வேறு வாசனை திரவியங்களைக் கொண்டு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டு, பின்னர் அஸ்திர தேவருடன் மகாமக குளத்தில் சிவாச்சாரியார் இறங்கி, மும்முறை முங்கி எழ, மாசி மக தீர்த்தவாரி சிறப்பாக நடைபெற்றது.
இதில் பல்லாயிரக்கணககான பக்தர்கள் கலந்து கொண்டு, மகாமக குளத்தில் புனித நீராடியும், கரைகளில் எழுந்தருளிய சாமிகளை தரிசனம் செய்தும் மகிழ்ந்தனர். இந்நிகழ்வை முன்னிட்டு, கும்பகோணம் டிஎஸ்பி கீர்த்தி வாசன் தலைமையில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. குளத்திற்குள் இரு பைபர் படகுகளுடன், கரையில் தீயணைப்பு மற்றும் மீட்பு வாகனத்துடன், தீயணைப்புத்துறை மற்றும் மீட்புத் துறையினர் தொடர்ந்து முன்னச்சரிக்கை நடவடிக்கை மற்றும் கண்காணிப்புப் பணியில் தீவிரமாக ஈடுபட்டு வந்தது குறிப்பிடத்தக்கது.