கோயம்புத்தூர்: இவ்வழக்கு தொடர்பாக கோவை வடவள்ளி போலீசார் பதிவு செய்துள்ள வழக்கு எண், CRNO.125/24- ன்படி, மருதமலை சுப்பிரமணிய சாமி கோயிலில் ஆண்டுதோறும் நடைபெறும், நகைகள் சரிபார்ப்புப் பணி கோவை இந்து சமய அறநிலையத்துறை நகைகள் சரிபார்ப்பு துணை ஆணையர் விஜயலட்சுமி தலைமையில் நேற்று நடைபெற்றது. இந்த ஆய்வின் போது மருதமலை திருக்கோயிலின் அறங்காவலர்கள் மற்றும் கோயில் நிர்வாகிகள் கலந்து கொண்டு, திருக்கோயிலில் உள்ள அனைத்து நகைகளையும் சரி பார்க்கும் பணியில் ஈடுபட்டனர்.
மருதமலை கோயிலின் உபகோயிலான கரி வரதராஜ பெருமாள் கோயிலின் தினக் கூலி அர்ச்சகரான ஸ்ரீ வாத்சாங்கன் என்பவர் அம்மனுக்கு அணிவிக்கப்படும், 14 கிராம் எடையுள்ள 7 பவுன் தாலி, 14 பொன் குண்டுகள் மற்றும் 150 கிராம் எடையுள்ள வெள்ளி பூணூலைக் கொண்டு வந்து கொடுத்துள்ளார். அப்போது அதிகாரிகள் ஆய்வு செய்தபோது, அந்த நகைகள் போலியானது என கண்டறியப்பட்டுள்ளது.
அதைத் தொடர்ந்து, அந்த அர்ச்சகரிடம் அறங்காவலர்கள் மற்றும் கோயில் அதிகாரிகள் விசாரணை செய்துள்ளனர். அந்த விசாரணையில், தான் தான் கோயில் நகைகளைத் திருடி, போலி நகையை மாற்றி வைத்ததாக ஒப்புக்கொண்டுள்ளார். அதையடுத்து, அறங்காவலர்கள் குழு மற்றும் கோயில் நிர்வாகிகள் வடவள்ளி காவல் நிலையத்தில் அளித்த புகாரின் அடிப்படையில் அர்ச்சகர் ஸ்ரீ வாத்சாங்கன் கைது செய்யப்பட்டார். அவர் மீது, இந்திய தண்டனைச் சட்டம் IPC 408 (நம்பிக்கை மோசடி) ,420 (ஏமாற்றுதல்) ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
மேலும், அவரிடம் நடத்திய விசாரணையில், திருடப்பட்ட நகைகளை கோவை பெரிய கடை வீதியில் உள்ள தங்கம் ஜுவல்லரியில் விற்று பணத்தை வாங்கி விட்டதாகத் தெரிவித்துள்ளார். அந்த வாக்குமூலத்தின் அடிப்படையில், தங்கம் ஜுவல்லரியின் உரிமையாளரை வரவழைத்த போலீசார் கோயிலுக்குச் சொந்தமான 14 கிராம் தங்கத்திலான தாலி மற்றும் குண்டுமணிகளை பறிமுதல் செய்தனர்.
இவ்வழக்கு தொடர்பாக பேசி போலீசார், ஏற்கனவே அர்ச்சகர் ஸ்ரீ வாத்சாங்கன் கடந்த 2023ஆம் ஆண்டு சென்னை எக்மோர் F2 காவல் நிலையத்தில் புதுப்பேட்டையில் உள்ள கோதண்ட ராமர் கோயிலில் 8 கிராம் தங்கம் மற்றும் 7 கிலோ வெள்ளி திருடியதாகக் கைது செய்யப்பட்டு, புழல் சிறையில் சுமார் 60 நாட்கள் சிறை தண்டனை அனுபவித்துள்ளார். இவர் மீதான குற்றப் பின்னணியை ஆராயாமல் மீண்டும் அர்ச்சகராக நியமித்துள்ளனர் என்றனர்.
கோவையில் கோயில் அர்ச்சகரே கோயில் நகைகளைத் திருடி மாட்டிக்கொண்ட சம்பவம் பக்தர்கள் மற்றும் சக அர்ச்சகர்கள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.