சென்னை: நடிகை திரிஷா குறித்து சர்ச்சை கருத்து தெரிவித்த விவகாரத்தில், தான் பேசிய முழு வீடியோவையும் பார்க்காமல் தனது நற்பெயருக்குக் களங்கம் கற்பித்ததாகக் குற்றம்சாட்டி, நடிகை திரிஷா, நடிகை குஷ்பு, நடிகர் சிரஞ்சீவி ஆகியோருக்கு எதிராக தலா 1 கோடி ரூபாய் மான நஷ்டஈடு வழக்கு தொடர அனுமதி கேட்டு நடிகர் மன்சூர் அலிகான் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்து இருந்தார்.
இந்த மனுவை விசாரித்த தனி நீதிபதி, நீதிமன்ற நேரத்தை வீணடிக்கும் நோக்கத்திலும், விளம்பர நோக்கிலும் வழக்கு தொடரப்பட்டுள்ளதாகக் கூறி, மன்சூர் அலிகானுக்கு ஒரு லட்ச ரூபாய் அபராதம் விதித்து, மனுவைத் தள்ளுபடி செய்து உத்தரவிட்டு இருந்தார். மேலும், இந்த அபராதத் தொகையை, சென்னை அடையாறு புற்றுநோய் மருத்துவமனைக்குச் செலுத்த உத்தரவிட்டு, அதற்கான கால அவகாசத்தையும் நீட்டித்து நீதிபதி உத்தரவிட்டார்.
இந்த நிலையில், தனி நீதிபதி பிறப்பித்த அபராத உத்தரவை எதிர்த்து மன்சூர் அலிகான், தொடர்ந்த மேல்முறையீடு வழக்கை விசாரித்த இரு நீதிபதிகள் அமர்வு, தனி நீதிபதி உத்தரவிற்கு தடை விதிக்க மறுத்து, அந்த உத்தரவை திரும்பப் பெறக் கோரி தனி நீதிபதி முன்பே மீண்டும் முறையிடும்படி அறிவுறுத்தினர்.
அதன் அடிப்படையில், தனது மனுவை அபராதத்துடன் தள்ளுபடி செய்த உத்தரவை மறு ஆய்வு செய்யக் கோரி நடிகர் மன்சூர் அலிகான் தரப்பில் தனி நீதிபதியின் முன் மனுத் தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனு நீதிபதி ஏ.ஏ.நக்கீரன் முன்பு விசாரணைக்கு வந்தபோது, மனு மீதான விசாரணையை பிப்ரவரி 13ஆம் தேதிக்கு நீதிபதி ஒத்திவைத்தார்.
இதையும் படிங்க: கனிமொழி தலைமையில் திமுக தேர்தல் அறிக்கை தயாரிப்பு குழு நாளை முதல் தமிழகம் முழுவதும் பயணம்!