திருநெல்வேலி: திருநெல்வேலியில் வன அலுவலகத்தில் வனத்துறை அமைச்சர் மதிவேந்தன் தலைமையில் அதிகாரிகளுடனான ஆலோசனை கூட்டம் இன்று நடைபெற்றது. ஆலோசனை கூட்டம் முடிந்த பிறகு வந்த அமைச்சரிடம் மாஞ்சோலை பகுதி மக்கள் கண்ணீர் மல்க கோரிக்கை மனு அளித்துள்ளனர்.
திருநெல்வேலியில் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் அமைந்துள்ள மலை கிராமங்களான மாஞ்சோலை, காக்காச்சி, ஊத்து, நாலு முக்கு உள்ளிட்ட பகுதிகளில் இருக்கும் தேயிலைத் தோட்ட தொழிலாளர்களை வெளியேற்றும் முயற்சி நடந்து வரும் சூழலில் தொழிலாளர்கள் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளனர். மேலும், தொழிலாளர்கள் வெளியேற வேண்டும் என்பதற்காக இந்த நடவடிக்கையை தேயிலை நிறுவனம் எடுத்திருப்பதாக தொழிலாளர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.
இந்த நிலையில் திருநெல்வேலிக்கு வந்த வனத்துறை அமைச்சர் மதிவேந்தனிடம், மாஞ்சோலை தேயிலை தோட்ட தொழிலாளர்கள், மாஞ்சோலை மலைப்பகுதியிலேயே தங்களுக்கு வாழ்வாதாரத்தி ஏற்படுத்தி தரவேண்டும் . மலைப்பகுதியிலேயே நிலம் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கண்ணீர் மல்க அமைச்சரிடம் கோரிக்கை மனு அளித்தனர்.
தொடர்ந்து, ஊதியம் இல்லாமல் 20 நாட்களுக்கு மேலாக சிரமப்பட்டு வருவதாகவும், உணவு உள்ளிட்ட அடிப்படை தேவைகள் கூட பூர்த்தி செய்ய முடியாமல் இருப்பதாகவும் அமைச்சரிடம் வேதனை தெரிவித்தனர். மனுவை பெற்றுக்கொண்ட அமைச்சர் உணவு உள்ளிட்ட அடிப்படை தேவைகளை பூர்த்தி செய்ய உடனடி நடவடிக்கை எடுக்கப்படும் என மாஞ்சோலை மக்களிடம் உறுதி அளித்தார்.
முன்னதாக அமைச்சர் மதிவேந்தன் செய்தியாளர்களைச் சந்தித்து கூறியதாவது, ”வனத்துறையில் பணியாளர் பற்றாக்குறையை போக்கும் வகையில் டிஎன்பிஎஸ்சி மூலம் புதிய பணியாளர்கள் நியமிக்கும் பணி நடைபெற்று வருகிறது. யானைகளை கண்காணிக்க, பாதுகாக்க வேட்டை தடுப்பு காவலர்கள் உட்பட பலர் இருக்கிறார்கள். இதற்காக கூடுதல் நிதியும் முதலமைச்சர் ஒதுக்கி இருக்கிறார். இதற்காக தனியாக குழு அமைக்க முடியாது.
மாஞ்சோலை விவகாரத்தில் நீதிமன்றத்தில் வழக்கு உள்ளது. ஆகையால் அதைப் பற்றி பேச முடியாது. வனத்துறை சார்பில் நீதிமன்றத்தில் நிலை அறிக்கையும் தாக்கல் செய்யப்பட்டு உள்ளது. காட்டுப் பன்றிகளை வனவிலங்கு பட்டியலில் இருந்து நீக்குவது குறித்து ஏற்கனவே சட்டமன்றத்தில் பேசி இருக்கிறேன். இதற்கான அரசாணை விரைவில் வெளியிடப்படும். அதற்கான நடவடிக்கைகள் தொடர்ந்து எடுக்கப்பட்டு வருகிறது” இவ்வாறு அவர் கூறினார்.
ஈடிவி பாரத் தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்
இதையும் படிங்க: கனமழை..மண்சரிவு ... தண்டவாளத்தில் சாய்ந்த மரங்கள்; உதகை - குன்னூர் மலை ரயில் சேவை ரத்து!