திருச்சி: நாடு முழுவதும் மத்திய அரசு தேசிய நெடுஞ்சாலை துறை அமைச்சகத்தின் கீழ் நெடுஞ்சாலைகளை பராமரிப்பதற்காக சுங்க கட்டணங்களை வசூலித்து வருகிறது. இதில் வருடத்திற்கு இரண்டு முறை சுங்க கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது.
இதனால் சுங்கச்சாவடிகளில் கட்டண உயர்வை ரத்து செய்ய வேண்டும், காலாவதியான சுங்கச்சாவடிகளை உடனடியாக இழுத்து மூட வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மனிதநேய மக்கள் கட்சி சார்பில் தமிழ்நாடு முழுவதும் திருச்சி, செங்கல்பட்டு உள்ளிட்ட 7 இடங்களில் சுங்கச்சாவடிகளை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
அதில் ஒரு பகுதியாக திருச்சி- தஞ்சை தேசிய நெடுஞ்சாலையில் திருவெறும்பூர் அருகே துவாக்குடி பகுதியில் உள்ள சுங்கச்சாவடியை மமகட்சியின் மாவட்ட செயலாளரும், மணப்பாறை எம்எல்ஏ அப்துல் சமது தலைமையில் கட்சியினர் முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அப்போது அப்துல் சமது செய்தியாளர்களிடம் கூறியதாவது, “தமிழகத்தில் 67 சுங்கச்சாவடிகள் உள்ளன. கடந்த ஐந்து நாட்களுக்கு முன்பாக விழுப்புரம் உள்ளிட்ட பகுதியில் 3 புதிய சுங்கச்சாவடிகள் தொடங்கப்பட்டுள்ளன. இதன் மூலம் தமிழகத்தில் சுங்கச்சாவடிகளின் எண்ணிக்கை 70 ஆக அதிகரித்துள்ளது. இந்த சுங்கச்சாவடிகள் மூலம் நாள் ஒன்றுக்கு சுங்க கட்டணமாக பல கோடி வசூலாகிறது.
ஆண்டிற்கு சுங்க கட்டணமாக தமிழகத்தின் சார்பில் ரூ.18 ஆயிரம் கோடி மக்கள் வரியாக செலுத்துகிறோம். கேரள மாநிலத்தில் 5 சுங்கச்சாவடிகள் மட்டுமே உள்ளன. தமிழகத்தில் உள்ள நெடுஞ்சாலைகளை கணக்கு பார்த்தால் 9 சுங்கச்சாவடிகள் மட்டுமே இருக்க வேண்டும்.
இதையும் படிங்க: "ஆக்கிரமிப்பு இடத்தில் உள்ள சுங்கச்சாவடியை இடிக்க அதிகாரிகள் தயங்குவது ஏன்?" பொதுமக்கள் ஆவேசம்!
இதுசம்பந்தமாக மனிதநேய மக்கள் கட்சி தலைவர் ஜவாஹிருல்லா சட்டமன்றத்தில் கேள்வி எழுப்பியபோது பொழுது, அதற்கு பதில் அளித்த பொதுப்பணித்துறை அமைச்சர் ஏவா வேலு, ‘ தமிழகத்தில் 30 சுங்கச்சாவடிகள் காலாவதி ஆகிவிட்டது என்றும் அவற்றை மூடுவதற்கு மத்திய அரசுக்கு கடிதம் எழுதியுள்ளதாகவும், இதுவரை ஆனால் அவர்கள் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை’ என்று கூறினார்.
மேலும், ஒரு வருடத்தில் ஏப்ரல் மற்றும் செப்டம்பர் என இரண்டு முறை 5 சதவீதம் முதல் 7 சதவீதம் வரை சுங்க கட்டணங்களை உயர்த்தியுள்ளது. இருசக்கர வாகனம் முதல் கார், பஸ், லாரி உள்ளிட்ட வாகனங்கள் வாங்கும் பொழுது சாலை வரியாக ஆண்டுக்கு 7 ஆயிரம் கோடி தமிழகத்திலிருந்து வரியாக செலுத்தப்படுகிறது. மாநில அரசின் கட்டுப்பாட்டை மீறி சுங்கச்சாவடிகளை மத்திய அரசு செயல்படுத்தி வருகிறது” என்று அவர் தெரிவித்தார்.
இந்த போராட்டத்தில் திருச்சி, தஞ்சை, நாகை, அரியலூர், கரூர் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த 400 பேர் கலந்துக் கொண்டுள்ளனர். முன்னதாக சுங்கச்சாவடி முன்பு போராட்டத்தில் ஈடுபட்ட மனித நேய மக்கள் கட்சியினர் சுங்கசாவடி கண்ணாடி, கேமரா, வாகன தடுப்பு கட்டைகளை உடைத்தனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. மேலும், 1 மணிநேரத்திற்கும் மேலாக போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டுள்ளது.