சென்னை: உடுமலைப்பேட்டையைச் சேர்ந்தவர் பெரியசாமி (33). இவர் கடந்த சில நாட்களாக சென்னை ஆயுதப்படையில் பணியாற்றி வரும் பெண் காவலர் ஒருவரின் தொலைபேசிக்கு தொடர்பு கொண்டு, அவருக்கு பாலியல் தொல்லை கொடுத்து வந்துள்ளதாக கூறப்படுகிறது.
பெரியசாமி, தொடர்ந்து பெண் காவல் ஆய்வாளர் போன்று தன் குரலை மாற்றி பேசி, ஆயுதப்படை பெண் காவலருக்கு தொல்லை கொடுத்து வந்த நிலையில், பாதிக்கப்பட்ட பெண் காவலர், இது குறித்து சைபர்கிரைம் போலீசாரிடம் புகார் அளித்துள்ளார். அந்த புகாரின் அடிப்படையில், போலீசார் தீவிர தேடுதல் பணியை மேற்கொண்டுள்ளனர்.
இதையடுத்து பெண் காவலரிடம் உரையாடிய செல்போன் ஆடியோவைப் பெற்ற சைபர் கிரைம் போலீசார், அதை வைத்து பெரியசாமியைத் தேடி வந்துள்ளனர். தொடர்ந்து தனிப்படை அமைக்கப்பட்டு தேடப்பட்டு வந்த நிலையில், பெரியசாமி போலீசாரால் கைது செய்யப்பட்டார்.
அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில், மொபைல் ஆப் மூலமாக தனது குரலை பெண் குரலாக மாற்றி தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு பேசி, பாலியல் தொந்தரவு கொடுத்ததாக ஒப்புக்கொண்டார். மேலும் விசாரணையில், அவர் மீது ஏற்கனவே திருப்பூர், ராமநாதபுரம், தருமபுரி உள்ளிட்ட மாவட்டங்களில் இதே போன்ற வழக்குகள் நிலுவையில் உள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர். இதையடுத்து அவர் மீது வழக்குப்பதிவு செய்த போலீசார், தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.