தஞ்சாவூர்: தஞ்சையை அடுத்த ரெட்டிபாளையம் பகுதியை சேர்ந்தவர் மணிகண்டன். இவர் கடந்த 2021 ஆம் ஆண்டு மார்ச் மாதம் இரவு படுகொலை செய்யப்பட்டார். இவரை படுகொலை செய்தவர்கள் தலையை துண்டித்து உடலை ரயில் தண்டவாளத்திலும், தலையை அதேப் பகுதியில் உள்ள கோயில் வாசல் முன்பாகவும் வைத்தனர். இந்த சம்பவம் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது.
இந்த கொலை வழக்கு தொடர்பாக தஞ்சை ரெட்டிபாளையம் சாலையை சேர்ந்த சதீஷ்குமார் (27) என்பவரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். பின்னர், சதீஷ்குமார் ஜாமீனில் வெளியே வந்துள்ளார். இந்த நிலையில் இந்த வழக்கு விசாரணை தஞ்சை கோர்ட்டில் கடந்த பிப்ரவ்ரி 13ம் தேதி நடைபெற்றது. இந்நிலையில் சஷீத் குமார் கோர்ட்டில் ஆஜராகி வீட்டிற்கு தனது நண்பர்களுடன் சென்றுள்ளார்.
அப்போது சதீஷ்குமாரின் நண்பர் ஒருவருக்கு விபத்தில் காயம் ஏற்பட்ட நிலையில் அவரை காண தஞ்சை மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு சதிஷ்குமார் தனது நண்பர்களுடன் சென்றுள்ளார். அப்போது கொலை செய்யப்பட்ட மணிகண்டனின் நண்பர்கள் சிலர் மருத்துவக்கல்லூரியில் சதிஷ்குமார் பார்த்துள்ளனர். அவர்கள் சதீஷ்குமாரிடம் தனியாக பேச வேண்டும் என கூறி அருகில் உள்ள கடைக்கு அழைத்து சென்றதாக கூறப்படுகிறது.
அங்கு மணிகண்டனின் நண்பர்கள் ஆயுதங்களுடன் சதீஷ்குமாரை வெட்டுவதற்கு முயன்ற நிலையில், சதிஷ் தற்காப்பிற்காக அங்கிருந்து ஓடியுள்ளார். அவரை தொடர்ந்து துரத்தி சென்ற கும்பல் மருத்துவமனை நுழைவாயில் எதிரே உள்ள கடை வாசல் முன்பு அவர்கள் மறைத்து வைத்திருந்த அரிவாளால் சதீஷை சரமாரியாக வெட்டிவிட்டு அங்கிருந்து தப்பி சென்றனர்.
இந்த நிலையில் ரத்த வெள்ளத்தில் கிடந்த சதிஷ்குமாரை மீட்ட நண்பர்கள் உடனடியாக அவரை சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு கொண்டு சென்ற நிலையில் சதிஷ் ஏற்கனவே இறந்து விட்டதாக மருத்துவர்கள் கூறியுள்ளனர். தகவல் அறிந்து வந்த போலீசார் நடத்திய விசாரணையில் பழிக்குப்பழியாக இந்த கொலை நடந்திருப்பது தெரியவந்துள்ளது என தெரிவித்தனர்.
இந்த கொலையில் தொடர்புடையவர்களை போலீசார் தேடி வந்த நிலையில் ஏற்கனவே இறந்த மணிகண்டனின் நண்பர்களான ஸ்டாலின், முத்துக்குமார், மொட்டை மணி, அலெக்ஸாண்டர், செந்தில்குமார், டக்ளஸ் மணி, மதன் மதியழகன், மற்றும் குரு பிரசாத் ஆகிய 8 பேரையும் போலீசார் கைது செய்தனர்.
இதையும் படிங்க: கொடைக்கானலில் புதிதாக கட்டப்பட்ட 100 அடி நீள சுவர் சரிந்து விபத்து! கடைகள் இடிந்து தரைமட்டம்! என்ன நடந்தது?