ராணிப்பேட்டை: ராணிப்பேட்டை மாவட்டம், கே.எச்.மேம்பாலம் அருகே ராணிப்பேட்டை காவல் நிலைய ஆய்வாளர் சசிகுமார் தலைமையில் போலீசார் வாகனத் தணிக்கையில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர். அப்பொழுது, அவ்வழியாக தலைக்கவசம் அணியாமல் இருசக்கர வாகனத்தில் வந்த ஒருவரை மடக்கிப் பிடித்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
ஆனால், அந்த நபர் போலீசாரின் கேள்விகளுக்கு முன்னுக்குப்பின் முரணாக பதில்களை தெரிவித்துள்ளார். இதனை அடுத்து உடனடியாக அந்த நபரை சந்தேகத்தின் அடிப்படையில் காவல் நிலையத்திற்கு அழைத்து வந்து விசாரணை மேற்கொண்டதாக கூறப்படுகிறது.
இதனை அடுத்து போலீசாரின் விசாரணையில், அந்த நபர் வாலாஜாபேட்டை அருகே உள்ள வீ.சி.மோட்டூர் கிராமத்தைச் சேர்ந்த பரமசிவன் என்பவரது மகன் கொக்கு என்கின்ற புருஷோத்தமன் என்பது தெரிய வந்துள்ளது. மேலும், தமிழகத்தில் வேலூர், திருவண்ணாமலை, காஞ்சிபுரம் ராணிப்பேட்டை என பல்வேறு பகுதிகளில் புருஷோத்தமன் வாகன திருட்டில் ஈடுபட்டு வந்ததும் பல்வேறு காவல் நிலையத்தில் பல வழக்குகள் நிலுவையில் உள்ளதும் தெரியவந்துள்ளது.
இதையும் படிங்க: செங்கல் சூளையில் தேங்கிய நீரில் மூழ்கி அண்ணன் - தங்கை உயிரிழப்பு!
குறிப்பாக, நூதன முறையில் ஸ்ப்ளெண்டர் பிளஸ் பைக்குகளை மட்டும் குறிவைத்து திருடி சொகுசு வாழ்க்கை வாழ்ந்து வந்துள்ளார் என்றும் கைது செய்யப்பட்ட புருஷோத்தமனிடம் இருந்து 5 லட்சம் மதிப்பிலான 8 இருசக்கர வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாகவும் போலீசார் தரப்பில் தெரியவந்துள்ளது.
இதனைத் தொடர்ச்சியாக, ராணிப்பேட்டை காவல் நிலைய போலீசார், இருசக்கர வாகன திருட்டில் ஈடுபட்டு வந்த கொக்கு (எ) புருஷோத்தமன் மீது வழக்குப் பதிவு செய்து கைது செய்து, ராணிப்பேட்டை நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தப்பட்டு வேலூர் மத்திய சிறையில் அடைத்தனர்.
ஈடிவி பாரத் தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே க்ளிக் செய்யவும்