சென்னை: நடிகரும், மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவருமான கமல்ஹாசன் கடந்த 30ஆம் தேதி தனது திரைப்பட பணிகளுக்காக சென்னையில் இருந்து அமெரிக்கா புறப்பட்டுச் சென்றார். இந்நிலையில் அமெரிக்காவில் இருந்து துபாய் வழியாக நேற்று நள்ளிரவு கமல்ஹாசன் சென்னை விமான நிலையம் வந்தடைந்தார்.
அப்போது சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய கமல்ஹாசன், "தக் லைப் (thug life) திரைப்பட முன்னேற்பாடுகளுக்காக அமெரிக்கா சென்றிருந்தேன். இப்போது அதை முடித்துவிட்டு சென்னை வந்துள்ளேன். இன்னும் இரண்டு நாட்களில் நல்ல செய்தியுடன் உங்களை சந்திக்கிறேன்.
தேர்தல் குறித்த செய்திகள் இங்கிருந்து தான் உருவாக்க வேண்டும். நாடாளுமன்றத் தேர்தல் பணிகள் எல்லாம் நல்லபடியாக நடந்து கொண்டிருக்கிறது. நல்ல வாய்ப்பு ஏற்படும் என நம்புகிறேன். கூட்டணி குறித்து இரண்டு நாட்களில் தெரிவிப்பேன் என கூறிவிட்டுச் சென்றார்.
கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம் வரும் நாடாளுமன்றத் தேர்தலில் இந்தியா கூட்டணியில் இணைந்து, தமிழ்நாடு காங்கிரஸ் கட்சிக்கு ஒதுக்கப்படும் இடங்களில் குறிப்பாக கோவை நாடாளுமன்றத் தொகுதியில் கமல்ஹாசன் போட்டியிட வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்நிலையில் நாடாளுமன்ற தேர்தல் கூட்டணி பேச்சுவார்த்தை குறித்து இன்று கமல்ஹாசன் முதலமைச்சர் ஸ்டாலினை சந்திக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்நிலையில் மக்கள் நீதி மய்யம் கட்சி தொடங்கி வரும் 21ஆம் தேதியுடன் 7 ஆண்டுகளை நிறைவு செய்கிறது. இதனைக் கொண்டாடும் வகையில் அன்று கொடியேற்றி வைத்து உரையாற்றவுள்ளார்.
இதையும் படிங்க: தமிழ்நாடு பட்ஜெட் 2024: காத்திருக்கும் 7 முக்கிய அறிவிப்புகள்!