சென்னை: மாமல்லபுரம் அருகே மேய்ச்சலுக்கு மாடுகளை விட்டு, அருகே சாலையோரத்தில் அமர்ந்திருந்த 5 பெண்கள் மீது கார் மோதி விபத்தை ஏற்படுத்தியதில், சம்பவ இடத்திலேயே அனைவரும் உயிரிழந்தனர். தற்போது, காவல்துறையினர் காரை ஓட்டிய மாணவரை கைது செய்து விசாரணை மேற்கோண்டு வருகின்றனர். காரில் உடனிருந்த பிற மாணவர்களை காவல் நிலைய பிணையில் விடுவித்துள்ளனர்.
விசாரணையில், செங்கல்பட்டு மாவட்டம் மாமல்லபுரம் அடுத்த பண்டிதமேடு கிராமத்தைச் சார்ந்த 5 பெண்கள் நேற்று முன் தினம் (நவ.27) புதன்கிழமை, அப்பகுதியில் உள்ள மேய்ச்சல் இடத்தில், மேய்ச்சலுக்காக மாடுகளை விட்டு விட்டு அருகே உள்ள கிழக்கு கடற்கரை சாலையோரம் அமர்ந்து பேசிக்கொண்டு இருந்துள்ளனர். அப்போது அவ்வழியாக அதிவேகமாக வந்த கார் ஒன்று அவர்கள் மீது மோதி விபத்துக்குள்ளாயுள்ளது. இதில், சம்பவ இடத்திலேயே 5 பெண்களும் உயிரிழந்தனர்.
இது குறித்து தகவல் அறிந்து வந்த மாமல்லபுரம் போலீசார், காரை ஓட்டி வந்த கல்லூரி மாணவர் ஜோஸ்வா (19) உட்பட இருவரை போலீசார் பிடித்து விசாரணை மேற்கொண்டு வந்தனர். தொடர்ந்து, காரிலிருந்து தப்பிச்சென்றவர்களையும் போலீசார் தேடி வந்தனர். இதில், விபத்து நடந்த நாளான புதன்கிழமை மாலையே தப்பிச் சென்ற மாணவர்களை போலீசார் பிடித்துள்ளனர்.
இதற்கிடையில், உயிரிழந்த நபர்களின் உறவினர்கள் இவர்கள் குடிபோதையில் காரை அதிவேகமாக ஓட்டி உயிரிழப்பு ஏற்படுத்தியதாக குற்றம் சாட்டினர். இதனையடுத்து, 4 பேரை போலீசார் மருத்துவமனைக்கு அழைத்து சென்று சோதனை செய்துள்ளனர். ஆனால், சோதனையில் அவர்கள் எந்தவித போதப் பொருட்களையும் பயன்படுத்தவில்லை என்பது தெரிய வந்துள்ளது.
இதனையடுத்து, ஆபத்தை விளைவிக்கக் கூடிய வகையில் வாகனத்தை வேகமாக இயக்குவது மற்றும் விபத்தின் மூலம் மரணத்தை ஏற்படுத்துவது என இரண்டு பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வந்துள்ளனர். காரில் இருந்த நான்கு நபர்கள் மீதும் வழக்கு பதிவு செய்துள்ள நிலையில், காரை ஓட்டி விபத்தை ஏற்படுத்திய கல்லூரி மாணவர் ஜோஸ்வாவை மட்டுமே கைது செய்ய முடியும் என்பதால், மற்ற மூன்று பேரையும் போலீசார் காவல் நிலைய ஜாமினில் விடுவித்துள்ளனர். தொடர்ந்து, மாணவர் ஜோஸ்வாவை நீதிமன்றத்தில் ஆஜர் படுத்த போலீசார் நடவடிக்கை எடுத்து வருவதாக தெரிவித்துள்ளனர்.
இதையும் படிங்க: பாம்பு கடித்த சிறுமி வழியிலேயே உயிரிழப்பு; முதலமைச்சர் இரங்கல்!
கிண்டி ராஜ்பவன் அருகே மரம் முறிந்து விழுந்ததில் பெண் காவலர் காயம்!
கிண்டி ராஜ்பவன் மெயின் கேட் எதிரில் போக்குவரத்து காவல்துறை பூத் அருகே நேற்று (நவ.28) காலை பரங்கிமலை ஆயுதப்படை பெண் காவலர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளார். அப்போது நெடுஞ்சாலைத்துறை வளாகத்தில் இருந்த மரம் பின்புறமாக சாய்ந்து விழுந்துள்ளது. இதில், பெண் காவலருக்கு இடது கையில் அடிபட்டு வீக்கம் ஏற்பட்டுள்ளது.
இது குறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த ராஜ் பவன் தீயணைப்பு மற்றும் மீட்பு பணித்துறையினர், சாலையில் விழுந்த மரத்தை அப்புறப்படுத்தினர். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. இதனையடுத்து, பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார், காவலர் நந்தினியை மீட்டு சைதாப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுள்ளனர். அங்கு அவருக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது.
அங்கு அவருக்கு எக்ஸ்ரே எடுத்து பார்த்த நிலையில், இடது கை எலும்பில் விரிசல் ஏற்பட்டிருந்தது தெரியவந்துள்ளது. இதனையடுத்து, மருத்துவர்கள் பரிந்துரையின் பேரில், ஆயுதப்படை அதிகாரிகள் அவருக்கு பத்து நாட்கள் மருத்துவ விடுப்பு வழங்கியுள்ளனர்.
ஈடிவி பாரத் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்