சென்னை: ஆந்திராவில் பதுங்கி இருந்த ரவுடி சீசிங் ராஜாவை கைது செய்த சென்னை தனிப்படை போலீசார், அவரை விசாரணைக்கு அழைத்து வந்தனர். அப்போது, சென்னை கிழக்கு கடற்கரை சாலை அக்கரை பக்கிங்காம் கால்வாய் சாலையில் போலீசார் சீசிங் ராஜாவை என்கவுண்டர் செய்தனர். மேலும், போலீசார் மீது தாக்குதல் நடத்த முயன்றதை தொடர்ந்து தற்காப்புக்காக போலீசார் துப்பாக்கியால் ரவுடி சீசிங் ராஜாவை சுட்டு என்கவுண்டர் செய்ததாக தெரிவித்தனர்.
இந்த நிலையில், இந்த என்கவுண்டர் நடைபெற்ற இடத்தை தடயவியல் நிபுணர்கள், தெற்கு மண்டல காவல்துறை கூடுதல் ஆணையர் ஆய்வு செய்த நிலையில், சோழிங்கநல்லூர் மாவட்ட உரிமையியல் மற்றும் குற்றவியல் நடுவர் நீதிமன்ற நீதிபதி கார்த்திக் ஆய்வு மேற்கொண்டனர். அப்போது, என்கவுண்டர் எப்படி நடைபெற்றது, எங்கே துப்பாக்கி பதுக்கி வைத்திருந்தார், எங்கிருந்து சுட முயற்சித்தார், போலீசார் எங்கிருந்து துப்பாக்கியால் சுட்டனர் என போலீசாரிடம் விசாரித்தனர்.
மேலும் சீசிங் ராஜா உடல் வைக்கப்பட்டுள்ள ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்குச் சென்று உடலை ஆய்வு செய்து விசாரணை நடத்தி, சீசிங் ராஜாவின் குடும்பத்தாரிடம் விசாரணை நடத்திய பிறகு, பிரேதப் பரிசோதனை நடத்தப்பட்டு, அவரது குடும்பத்தாரிடம் உடல் ஒப்படைக்கப்படும் என போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: "சீசிங் ராஜாவிற்கும் ஆம்ஸ்ட்ராங் கொலைக்கும் சம்பந்தம் இல்லை" - சென்னை போலீஸ் விளக்கம்!
இந்த நிலையில், சீசிங் ராஜாவின் உடலை வாங்க அவரது மனைவி மற்றும் நான்கு துணைவியார் உரிமை கோருவதால் உடலை ஒப்படைப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளதாக போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. மேலும், சீசிங் ராஜா முறைப்படி திருமணம் செய்து கொண்ட ஜானகி என்பவரிடம் உடற்கூறு ஆய்வுக்காக கையெழுத்து வாங்க போலீசார் விசாரணை நடத்தி வரும் நிலையில், சீசிங் ராஜாவின் நான்கு துணைவியாரும் உடலை வாங்க உரிமை கோருவதால், போலீசாரிடையே குழப்பம் ஏற்பட்டுள்ளதாக கூறப்பட்டது.
இந்த நிலையில், நான்கு துணைவியார்களில் ஒருவர் வழக்கறிஞராக இருப்பதாகவும், அவர் சட்டப்படி உடலை வாங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும் தகவல் வெளியாகியது.
இந்த நிலையில், அவரது துணைவியார் ஜானகியிடம் நேற்று நள்ளிரவு உடல் ஒப்படைக்கப்பட்டது. இதையடுத்து ரவுடி சீசிங் ராஜாவின் உடல் சென்னை கிழக்கு தாம்பரம் சிட்லபாக்கம் பகுதியில் உள்ள அவரது வீட்டிற்கு கொண்டுவரப்பட்டது. முன்னதாக, நேற்றிரவே அவரது உடல் அடக்கம் செய்யப்பட வேண்டும் என போலீசார் தெரிவித்த நிலையில், உறவினர்கள் எல்லாம் வர வேண்டி இருக்கிறார்கள், எனவே இன்று குரோம்பேட்டை மின் மயானத்தில் தகனம் செய்யப்படும் என அவரது குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர். இதையடுத்து அப்பகுதியில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.