மதுரை: 2024 - 2025ஆம் நிதியாண்டுக்கான தமிழ்நாடு அரசின் நிதிநிலை அறிக்கையை நிதி மற்றும் மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு தாக்கல் செய்தார். இதில், தொழில், பண்பாடு, தொல்லியல் என உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளில் மதுரைக்காக 20 திட்டங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.
இது குறித்த பலரும் தங்களுடைய கருத்துகளைப் பகிர்ந்து வருகின்றனர். அந்த வகையில் மதுரையில் உள்ள தொழில்துறையினர் இந்த பட்ஜெட்டை எவ்வாறு பார்க்கிறார்கள் என்பதனை அறிந்து கொள்ள ஈடிவி பாரத் கள ஆய்வு மேற்கொண்டது. அப்போது பலரும் தங்களுடைய கருத்துகளை நம்மிடையே பகிர்ந்து கொண்டார்கள்.
இது குறித்து மதுரை மடீட்சியா தலைவர் லட்சுமி நாராயணன் கூறுகையில், "இதனை வழக்கமான பட்ஜெட் என்பதைவிடப் பொதுமக்கள் சார்ந்த பரவலான நலத்திட்டங்களை உள்ளடக்கிய பட்ஜெட் என்றே கூறலாம். இருப்பினும் மின்சார கட்டணத்தின் உயர்வால் பாதிக்கப்படும் எம்எஸ்எம்இ நிறுவனங்களுக்கான நிலை கட்டணக் குறைப்புச் செய்திருக்க வேண்டும்.
நலிவடைந்த தொழில்களுக்கான எம்எஸ்எம்இ நலவாரியம் குறித்து அறிவிப்பு இல்லை. திவாலான தொழிற்சாலைகள் புத்துயிர் பெற மற்றும் தொழிலிருந்து வெளியேறப் போன்றவற்றுக்கான காப்பீட்டுத் திட்ட வசதிகள் குறித்த அறிவிப்பு இல்லாதது ஏமாற்றமளிக்கிறது.
குறைந்த வட்டி விகிதங்களில் தொழில் கடன் வழங்குவதற்கான அறிவிப்பும் இல்லை. மேலூரில் சிப்காட் தொழிற்பேட்டைப் பணிகளை விரைவுபடுத்த வேண்டும். பெரு நிறுவனங்கள் மதுரை மாவட்டத்திற்கு வருவதற்கான வழிவகைகள் மேற்கொள்ளப்பட வேண்டும். ஒன்றைச் சாளர முறையில் அனைத்து அனுமதிகளும் கிடைக்க வழி செய்ய வேண்டும்" என்றார்.
இதனையடுத்து வேளாண் உணவு தொழில் வர்த்தக சங்கத்தின் தலைவர் எஸ்.ரத்தினவேல் கூறுகையில், "தமிழ்நாட்டில் வடக்கு மற்றும் மேற்கு மாவட்டங்களோடு ஒப்பிட்டால் தென் மாவட்டங்களில் தொழில், பொருளாதார வளர்ச்சி மிகவும் குறைவாக உள்ளது. தென் தமிழகத்தின் வலிமை சுற்றுலாத்துறை, வழிபாடு, பொழுதுபோக்கு, கடற்கரை, கலாச்சாரம், தொல்பொருள், மருத்துவம், இயற்கைச் சுற்றுச்சூழல், பாரம்பரியம், பொருட்காட்சி எனப் பல சுற்றுலாக்களுக்குத் தென் தமிழகத்தில் அதிக வாய்ப்புகள் உள்ளன.
தென் தமிழ்நாட்டிற்கு அதிக உள்நாட்டு, வெளிநாட்டுச் சுற்றுலாப் பயணிகள் வந்து தங்கினால் தொழில் வணிகம் வளர்ச்சி காணும். எனவே தென் தமிழக சுற்றுலாத்தலங்கள் உலகத் தரத்திற்கு மேம்படுத்தப்பட வேண்டும். அதற்கான கட்டமைப்புகள் அனைத்தும் தாமதமில்லாமல் ஏற்படுத்தப்பட வேண்டும். இதையெல்லாம் தாண்டி பொருளாதார வலிமை மிக்க மாநிலமாகத் தமிழ்நாடு தொடர்ந்திருக்க பல்வேறு வளர்ச்சித் திட்டங்களைக் கொண்ட பட்ஜெட் இது" என்றார்.
தமிழ்நாடு தொழில் வர்த்தக சங்கத்தின் தலைவர் முனைவர் ஜெகதீசன் கூறுகையில், "மதுரையில் தொழில் புத்தாக்க மையம், இலவச வை-பை வசதி, புதிய டைடல் பூங்காவுக்கு ரூ.350 கோடி ஒதுக்கீடு, ரூ.17 கோடியில் கீழடியில் திறந்தவெளி அருங்காட்சியகம் உள்ளிட்ட அறிவிப்புகள் வரவேற்கத்தக்கவை.
மதுரை மாநகரின் போக்குவரத்து நெருக்கடியைத் தீர்க்கும் வகையில் அமைக்கப்படவிருக்கும் மெட்ரோ ரயில் திட்டத்திற்குத் தமிழக அரசின் பங்களிப்பான திட்ட மதிப்பீட்டில் 20 விழுக்காடான ரூ.1700 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்படவில்லை.
மதுரை மத்திய சிறைச்சாலையை மாற்றம் செய்வதற்கான அறிவிப்பு ஏற்கனவே வெளியான நிலையிலும், அதற்கான நிதி ஒதுக்கீடு செய்யப்படவில்லை. மதுரை விமான நிலைய ஓடுதளத்தை விரிவாக்கம் செய்ய முதற்கட்டமாகச் செய்ய வேண்டிய அண்டர் பாஸ் திட்டத்திற்கு நிதி ஒதுக்கீடு இல்லை.
தென்தமிழகத் தொழில் வளர்ச்சிக்குத் தேவையான நீண்ட கால கோரிக்கையான மதுரையில் டிரேட் மற்றும் கன்வென்சன் சென்டர் அமைப்பதற்கான அறிவிப்பு இல்லாமல் இருப்பதும் தென் தமிழகத்தில் புதிய தொழில்நுட்பப் பூங்காக்கள் அமைப்பதற்கான அறிவிப்புகள் எதுவும் இந்த நிதிநிலை அறிக்கையில் அறிவிக்கப்படாதது ஏமாற்றமளிக்கிறது" என்றார்.
இதையும் படிங்க: 'தமிழ் புதல்வன் திட்டம்' இனி மாணவர்களுக்கு மாதம் 1000 - தமிழக பட்ஜெட்டில் அறிவிப்பு..!