மதுரை: நடிகை கவுதமி ராமநாதபுரம் காவல்நிலையத்தில், "ராமநாதபுரம் மாவட்டத்தில் நிலம் வாங்கி தருவதாக கூறி அழகப்பன் என்பவர் ரூ.3 கோடி வாங்கியிருந்தார். இந்நிலையில் முதுகுளத்தூர் பகுதியில் உள்ள சுவாத்தான் கிராமத்தில் 57 லட்சத்திற்கு 64 ஏக்கர் நிலத்தினை வாங்கி கொடுத்தார்.
ஆனால் பிளசிங் பார்ம் என்ற நிறுவனத்திற்கு சொந்தமான அந்த நிலத்தை விற்பனை செய்வதற்கு செபி அமைப்பு தடை செய்துள்ளதை மறைத்து மோசடியாக அழகப்பன் என்னிடம் விற்பனை செய்துள்ளார். எனவே அவரிடம் இருந்து எனது பணத்தை மீட்டுத்தர நடவடிக்கை எடுக்க வேண்டும்" என புகார் அளித்துள்ளார்.
இந்த புகாரின் அடிப்படையில், அழகப்பன் உள்ளிட்ட 6 பேர் மீது, ராமநாதபுரம் குற்றபிரிவு போலீசார் வழக்குப் பதிவு செய்தனர். இந்த வழக்கில் தங்களுக்கு முன் ஜாமின் வழங்க கோரி, உயர்நீதிமன்ற மதுரை அமர்வில் அழகப்பன், அவரது மனைவி ஆர்த்தி, ஜோசப் ஜெயராஜ், பாக்கிய சாந்தி, ஜெயபாலன், சந்தான பீட்டர் ஆகியோர் மனுத் தாக்கல் செய்திருந்தார்.
இவர்களுக்கு முன் ஜாமின் வழங்க கூடாது என நடிகை கவுதமி தரப்பில் தாக்கல் இடையீட்டு மனுவும் தாக்கல் செய்யப்பட்டது. இந்நிலையில் இந்த மனு மீதான விசாரணை இன்று (நவ.29) நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் முன்பாக விசாரணைக்கு வந்தது. நடிகை கௌதமி இன்று நீதிமன்றத்திற்கு நேரில் வந்திருந்தார்.
இதையும் படிங்க: 10 வயது சிறுவன் கொலை வழக்கு: குற்றவாளிக்கு ஆயுள் தண்டனை - நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு!
நடிகை கவுதமி தரப்பில் அழகப்பன் மற்றும் அவருக்கு தொடர்புடையவர்களுக்கு முன் ஜாமின் வழங்க கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. மனுதாரர்கள் தரப்பில், "குற்றம் சாட்டப்பட்ட நபரின் உறவினர்களும், இந்த வழக்கில் சேர்க்கப்பட்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து நீதிபதி,"வழக்கின் 6 குற்றவாளிகளில், ஜோசப் ஜெயராஜ், பாக்கிய சாந்தி, ஜெயபாலன், சந்தான பீட்டர் ஆகிய 4 பேருக்கும் முன் ஜாமின் வழங்கி உத்தரவிட்டார்.
பின்னர், கௌதமியிடமிருந்து வாங்கிய பணத்தை திரும்ப செலுத்துவதாக இருந்தால் முக்கிய குற்றவாளிகளான அழகப்பன் மற்றும் அவரது மனைவிக்கு முன் ஜாமின் வழங்குவது குறித்து பரிசீலிக்கலாம் என தெரிவித்தார். இதையடுத்து அழகப்பன் தரப்பில் ஏதும் தெரிவிக்காத நிலையில் முக்கிய குற்றவாளிகளான அழகப்பன் மற்றும் அவரது மனைவி ஆர்த்தி ஆகியோரின் முன் ஜாமின் மனுவை நீதிபதி தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.
மேலும் இந்த வழக்கு திட்டமிட்டு மோசடியில் ஈடுபட்டாதாக கூறப்படுவதால், வழக்கில் முன் ஜாமின் வழங்க இயலாது. முக்கியமாக குற்றம் சாட்டப்பட்டவர்கள், போலீசார் மற்றும் செபி உள்ளிட்டவைகளின் விசாரணைக்கு ஒத்துழைக்க வேண்டும் என நீதிபதி உத்தரவிட்டார்.
ஈடிவி பாரத் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்