மதுரை: கும்பகோணத்தைச் சேர்ந்த அப்பாசாமி உயர்நீதிமன்ற மதுரை கிளையில் தாக்கல் செய்த மனுவில், தனது மகன் மாரிமுத்து அவரது மனைவியைப் பிரசவத்திற்காகத் தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் அரசு தலைமை மருத்துவமனையில் கடந்த ஏப்ரல் 2022இல் அனுமதித்தார். அப்போது அவர் மனைவியைப் பார்க்க வார்டு உள்ளே செல்ல முயன்ற போது காவலாளி அனுமதிக்கவில்லை. அப்போது எனது மகனுக்கும் காவலாளிக்கும் வாக்குவாதம் முற்றி சண்டை ஏற்பட்டுள்ளது.
அதனைத் தொடர்ந்து அந்த காவலாளி யாருக்கோ போன் செய்து சண்டை குறித்துப் பேசியுள்ளார். மறுநாள் காலை எனது மகன் மாரிமுத்து மருத்துவமனை கழிவறையில் உடல் முழுவதும் ரத்த காயங்களுடன் இறந்து கிடந்தார். பின்பு இவ்வழக்கை விசாரணை செய்த போலிசார் அவர் குடிபோதையில் தவறி விழுந்து இறந்ததாக வழக்கை முடித்து வைத்தனர்.
இந்நிலையில் இந்த விசாரணை நியாயமான முறையில் நடைபெறவில்லை எனவும், எனது மகனின் இறப்பிற்கு நியாயம் கிடைக்க இந்த வழக்கை சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றம் செய்ய வேண்டும் என மனுவில் கூறியிருந்தார். இந்த மனு நீதிபதி சக்தி குமார் சுகுமார குரூப் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது.
அப்போது நீதிபதி, மனுதாரரின் மகன் மாரிமுத்து இறந்த வழக்கை காவல்துறையினர் முடித்து வைத்தது ஏற்புடையது அல்ல எனவும், எனவே இந்த வழக்கை சிபிசிஐடிக்கு மாற்றியும், (ADGP) வழக்கு விசாரணைக்காக மூத்த அதிகாரியை நியமித்து வழக்கை முறையாக விசாரித்து மன்றத்தில் தாக்கல் செய்ய வேண்டும்.
மேலும் அதனை அந்த மூத்த அதிகாரி கண்காணிக்க வேண்டும். இந்த விசாரணையில் மனுதாரருக்கு ஏதாவது குறைபாடுகள் இருக்கும்பட்சத்தில் மீண்டும் இந்த நீதிமன்றத்தை நாடலாம் எனவும், இந்த வழக்கில் சிபிசிஐடி விசாரணைக்கு மனுதாரர் முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என உத்தரவிட்டு வழக்கு விசாரணையை முடித்து வைத்தார்.