மதுரை: தஞ்சாவூர், ஆஞ்சநேயர் கோயில் முன் அமர்ந்து மது அருந்தியவருக்கு ஆதரவாகத் தகராறு செய்த வழக்கில் நிபந்தனைகளுடன் ஜாமீன் வழங்கி உயர் நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவு.
பெண் போலீஸிடம் தகராறு செய்ததாகக் கைது செய்யப்பட்ட இந்து முன்னணி மாவட்டச் செயலாளர் குபேந்திரன் ஜாமீன் வழங்கக் கோரி மனு தாக்கல் செய்திருந்தார்.
அதில், "கடந்த ஜனவரி 6ஆம் தேதி தஞ்சாவூர் ஆஞ்சநேயர் கோயில் பகுதியில் பெண் போலீசார் ஆதிநாயகி ரோந்துப் பணியில் ஈடுபட்டபோது அங்கு பொது இடத்தில் அமர்ந்து ஆட்டோ ஓட்டுநர் ரவி என்பவர் கோயில் விளக்கேற்றும் பகுதியில் மது அருந்தியுள்ளார். இதைப் பார்த்த பெண் காவலர் ஆதிநாயகி கோயில் பகுதியில் மது அருந்தக்கூடாது உடனே கலைந்து செல்லுங்கள் என்று கூறியுள்ளார்.
கலைந்து போக முடியாது எனக்கூறி ஆட்டோ ஓட்டுநர் ரவி பிரச்சனையில் ஈடுபட்டுள்ளார். மேலும், சம்பவ இடத்திற்கு இந்து முன்னணி மாவட்டச் செயலாளர் குபேந்திரன் வந்து பெண் போலீசாரை அசிங்கமான வார்த்தைகளாலும் திட்டி உள்ளாடைகளைக் கழட்டி ஆட்களைத் திரட்டி அங்குச் சாலை மறியலில் ஈடுபட்டு உள்ளனர்.
இது குறித்து தகவல் அறிந்த தஞ்சாவூர் போலீசார் இச்சம்பவம் தொடர்பாக மூவரையும் கைது செய்தார்கள். இந்த சம்பவம் தஞ்சாவூர் மாவட்டத்தில் பெரும் பரபரப்பு ஏற்படுத்தியது. இந்நிலையில், கைது செய்யப்பட்டு சிறையில் உள்ள மூன்று நபரும் தங்களுக்கு ஜாமீன் வழங்கக் கோரி மனுத் தாக்கல் செய்திருந்தனர்.
இந்த வழக்கில் ஏற்கனவே இருவருக்கு நீதிமன்றம் ஜாமீன் வழங்கி இருந்தது. ஆனால், இந்து முன்னணிப் பிரமுகர் குபேந்திரனுக்கு ஜாமீன் வழங்க நீதிபதி மறுத்துவிட்டார். இந்நிலையில் இந்த வழக்கில் தனக்கு ஜாமீன் வழங்க வேண்டும் என குபேந்திரன் மூன்றாவது முறையாக நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார்.
இந்த ஜாமீன் மனு நீதிபதி தண்டபாணி முன் விசாரணைக்கு வந்தது. இந்த வழக்கில் அரசுத் தரப்பில் கூடுதல் குற்றவியல் வழக்கறிஞர் நம்பி செல்வன் ஆஜராகி, மனுதாரர் காவல்துறைக்கு எதிராக மிகப்பெரிய குற்றச் செயலில் ஈடுபட்டுள்ளார். இவருக்கு ஜாமீன் வழங்கக் கூடாது என எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.
அப்பொழுது குபேந்திரன் தரப்பில், "எதிர்காலத்தில் காவல்துறை அதிகாரிகளுக்கு எந்த அவமரியாதை செய்யும் விதத்தில் நடக்க மாட்டேன் என மனுதாரர் உறுதிமொழிப் பத்திரத்தைத் தாக்கல் செய்துள்ளார்" என தெரிவித்தனர்.
இதனைப் பதிவு செய்த நீதிபதி, மனுதாரர் உறுதிமொழி பத்திரம் தாக்கல் செய்துள்ளதால், மனுதாரருக்கு நிபந்தனை ஜாமீன் வழங்கப்படுகிறது. தினந்தோறும் சம்பந்தப்பட்ட காவல் நிலையத்தில் ஆஜராகிக் கையெழுத்திட வேண்டும் என்ற நிபந்தனையில் உட்படப் பல்வேறு நிபந்தனைகளை விதித்து ஜாமீன் வழங்கி உத்தரவு பிறப்பித்தார்.
இதையும் படிங்க: சிவில் நீதிபதி தேர்ச்சி பட்டியல் ரத்து: சென்னை உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு! என்ன காரணம்?