மதுரை: சக்கரக்கோட்டையை சேர்ந்த அப்துல் ரகுமான் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் தாக்கல் செய்த மனுவில், “ராமநாதபுரம் அருகில் அமைந்துள்ள சக்கரக்கோட்டை கிராமத்தில் சுமார் 2 ஆயிரம் குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இந்த கிராமத்தில் பெரிய கண்மாய் உள்ளது. இங்கிருந்து ராமநாதபுரம் மாவட்டத்திற்குக் குடிநீர் கொண்டு செல்லப்படுகிறது. ராமநாதபுரம் மாவட்டத்திற்கு இந்த கண்மாய் முக்கியமான நீர் ஆதாரமாகவும் இருந்து வருகிறது.
இந்த நிலையில், ராமநாதபுரம் நகர்ப் பகுதியிலிருந்து சேகரிக்கப்படும் குப்பை கழிவுகள் அனைத்தும் சக்கரக்கோட்டை கிராமம் உள்ள பெரிய கண்மாய் அருகே கொட்டப்படுகிறது. இதனால் பெரிய கண்மாய் முழுவதுமாக மாசடைந்து வருகிறது. இதனால் இந்த கண்மாயில் மாசு கலந்து தொற்று நோய் ஏற்படும் அபாயம் உள்ளது. மேலும் ஜோதி நகர், நேரு நகர் உட்பட அனைத்து பகுதிகளின் கழிவு நீர் தொழுகை பள்ளிவாசல் அருகில் தேங்கி உள்ளது.
இதனால், இப்பகுதியில் வசிக்கும் பொதுமக்கள் பல விதமான தொற்று நோய்க்கு உள்ளாகி வருகின்றனர். ராமநாதபுரத்தில் இருந்து வெளியேற்றப்படும் கழிவுகளைச் சுத்திகரிக்கச் சுத்திகரிப்பு நிலையங்கள் அமைக்கப்படவில்லை. மழைக்காலங்களில் வெள்ள நீர் ஏற்பட்டு தண்ணீர் திறக்கப்பட்ட போது கழிவுகள் அனைத்தும் விவசாய நிலங்களுக்குள் செல்லும் நிலை ஏற்பட்டு வருகிறது. எனவே ராமநாதபுரத்திலிருந்து கொட்டப்படும் கழிவுகள் கண்மாயில் கலக்காமல் தடுக்க உத்தரவிட வேண்டும்” என மனு செய்திருந்தார்.
இந்த மனு நீதிபதிகள் ஜி.ஆர். சுவாமிநாதன், புகழேந்தி அமர்வு முன்பு விசாரணைக்கு வந்த போது, இவ்வழக்கை விசாரணை செய்த நீதிபதிகள், மனுதாரர் புகார் குறித்து ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர், வட்டார வளர்ச்சி அலுவலர் மற்றும் சக்கரக்கோட்டை ஊராட்சி நிர்வாகம் தரப்பில் பதில் மனு தாக்கல் செய்ய உத்தரவிட்டு வழக்கு விசாரணை ஒத்தி வைத்தனர்.
இதையும் படிங்க: ஜல்லிக்கட்டு பரிசு வழங்கியதில் முறைகேடு என வழக்கு; மதுரை ஆட்சியர் பதிலளிக்க உத்தரவு!