மதுரை: வர்மக்கலை முத்திரையை இந்தியன் 1-ல் அனுமதியுடனும், இந்தியன் 2-ல் அனுமதியின்றியும் பயன்படுத்தி உள்ளதால், இந்தியன் 2 படத்தை வெளியிட தடை விதிக்கக்கோரி மதுரையைச் சேர்ந்த வர்மக்கலை தலைமை ஆசான் ராஜேந்திரன் தாக்கல் செய்த வழக்கு மதுரை மாவட்ட 4வது கூடுதல் உரிமையியல் நீதிமன்றத்தில் நீதிபதி செல்வ மகேஸ்வரி முன் விசாரணை நடைபெற்றது.
வர்மக்கலை தலைமை ஆசான் ராஜேந்திரன், இயக்குநர் ஷங்கர், நடிகர் கமல்ஹாசன், தயாரிப்பாளர் சுபாஷ்கரன் தரப்பில் வழக்கறிஞர்கள் ஆஜராகி வாதாடினர். மனுதாரர் தரப்பில் வழக்கறிஞர் வாதிடுகையில், "இந்தியன் 1 படத்தில் எங்களின் அனுமதியோடு வர்மக்கலை முத்திரை பயன்படுத்தப்பட்டது. இந்தியன் 2 படத்தில் எங்களின் அனுமதியில்லாமல் வர்மக்கலை முத்திரை பயன்படுத்தப்பட்டு உள்ளது.
இந்தியன் 1 படத்தில் ராஜேந்திரன் பெயர் டைட்டில் கார்டில் போடப்பட்டது. இந்தியன் 2 படத்தில் ராஜேந்திரன் பெயரை டைட்டில் கார்டில் போட வேண்டும், மனுதாரர் ராஜேந்திரன் 50 வருடங்களாக வர்மக்கலையை பயிற்றுவித்து வருகிறார். இந்தியன் 1 படப்பிடிப்பில் வர்மக்கலை தலைமை ஆசான் ராஜேந்திரன் நேரில் பங்கேற்றார். வர்மக்கலை குறித்து ராஜேந்திரன் கடந்த 1993 மற்றும் 1994 ஆகிய ஆண்டுகளில் 2 புத்தகங்களை எழுதி உள்ளார். புத்தகத்தில் உள்ள தகவல்களைத் தழுவி இந்தியன் 1 காட்சிகள் வைக்கப்பட்டுள்ளது" என கூறினார்.
இயக்குநர் ஷங்கர் தரப்பு வழக்கறிஞர் வாதிடுகையில், "வர்மக்கலை உலக அளவில் உள்ள கலையாகும். அகஸ்தியர் தோற்றுவித்தது. வர்மக்கலைக்கு யாரும் உரிமை கோர முடியாது. கராத்தே, குங்ஃபூ போன்ற கலைகள் போல வர்மக்கலை உலகெங்கும் பரவி உள்ளது.
இந்தியன் 1 ராஜேந்திரன் வர்மக்கலை குறித்த தகவல்கள் மட்டுமே தந்தார். இந்தியன் 2 வர்மக்கலையை தழுவி எடுக்கவில்லை. இந்தியன் 2 ஊழலுக்கு எதிராக எடுக்கப்பட்ட படமாகும். இந்தியன் 2 படம் குறித்த அறிவிப்புகள் கடந்த 2017ஆம் ஆண்டு அறிவிக்கப்பட்டது. மனுதாரர் ராஜேந்திரன் 2024ஆம் ஆண்டு வழக்கு தொடுத்து உள்ளார்.
இந்தியன் 2 படம் ரூ.1,000 கோடி அளவிற்கு வர்த்தகம் நடைபெறும். இந்தியன் 2 படத்திற்கு ஆயிரக்கணக்கான திரைக்கலைஞர்கள் இரவு, பகலாக உழைத்து உள்ளனர். அதனை நீதிமன்றம் கவனத்தில் கொள்ள வேண்டும். இந்தியன் 2 படத்தை தடை செய்யக் கோரிய வழக்கில் எந்தவொரு முகாந்திரமும் இல்லை. ஆகவே, வழக்கை தள்ளுபடி செய்ய வேண்டும். இந்தியன் 2 படத்திற்கான டிக்கெட் விற்பனை உலகெங்கும் நடைபெற்று உள்ளது. இந்தியன் 2 படத்தை தடை செய்தால் சட்டம் - ஒழுங்கு பிரச்னை வரக்கூடும்" என தெரிவித்தார்.
தயாரிப்பாளர் சுபாஷ்கரன் தரப்பில் வழக்கறிஞர் வாதிடுகையில், "மனுதாரர் ராஜேந்திரனுக்கும், இந்தியன் 2 படத்திற்கும் எந்தவொரு தொடர்பும் இல்லை. திரைப்படம் தொடர்பான வணிக பிரச்னைகளை இந்த நீதிமன்றம் விசாரிக்கக் கூடாது. வணிக வழக்குகளை விசாரிக்கும் மாவட்ட முதன்மை நீதிமன்றங்கள் விசாரிக்க வேண்டும்.
இந்தியன் 2 படம் திரையிட தயாராக உள்ளது. எந்த அடிப்படையில் இந்தியன் 2 படத்தில் மனுதாரர் ராஜேந்திரன் பெயர் வர வேண்டும் என கூற வேண்டும். வணிக பிரச்னைகளை விசாரிக்கும் நீதிமன்றத்தில் இந்த வழக்கு விசாரிக்கப்பட வேண்டும். ஆகவே, இவ்வழக்கை நீதிமன்றம் தள்ளுபடி செய்ய வேண்டும். சட்ட விதிகளுக்கு எதிராக மனுதாரர் வழக்கு தாக்கல் செய்துள்ளார்.
இந்தியன் 2 ரிலீஸ் தேதி தெரிந்தே மனுதாரர் கடைசி நேரத்தில் வழக்கு தாக்கல் செய்துள்ளார். இளையராஜா பாடல்கள் தொடர்பாக வழக்கு தொடுத்தார். அவ்வழக்கில் பாடல்கள் உரிமை குறித்து தெளிவாக கூறி இருப்பார். ஆனால், ராஜேந்திரன் எந்த அடிப்படையில் உரிமை கோருகிறார் என கூறவில்லை" என தெரிவித்தார்.
நடிகர் கமல்ஹாசன் தரப்பில் வழக்கறிஞர் வாதிடுகையில், "அகத்தியர் வழங்கிய வர்மக்கலையின் முத்திரைகளை கமல்ஹாசன் பயன்படுத்தி உள்ளார். நடிகர் கமல்ஹாசனுக்கும், ராஜேந்திரனுக்கும் எந்தவொரு ஒப்பந்தமும் செய்யவில்லை. இவ்வழக்கை சென்னையில் தான் விசாரிக்க வேண்டும்" என தெரிவித்தார்.
வர்மக்கலை தலைமை ஆசான் மதுரை ராஜேந்திரன் தரப்பு வழக்கறிஞர் மீண்டும் வாதிடுகையில் "எங்களின் முத்திரைகள் இந்தியன் 2 படத்தில் பயன்படுத்தப்பட்டு உள்ளது. இந்தியன் 2 படத்தில் பயன்படுத்தப்படும் முத்திரைகள் குறித்த விவரங்களை எங்கே இருந்து எடுக்கப்பட்டது என நீதிமன்றத்தில் கூறவில்லை, புத்தகங்களில் உள்ள முத்திரைகள் தான் இந்தியன் 2 படத்தில் பயன்படுத்தப்பட்டு உள்ளது" என தெரிவித்தார்.
இந்த வாதங்களைக் கேட்ட நீதிபதி, இவ்வழக்கில் தீர்ப்பு வழங்கினார். அதில், "இந்தியன் 2 படத்தை வெளியிட தடையில்லை. இந்தியன் 2 படத்தை வெளியிட தடை விதிக்கக் கோரி வர்மக்கலை ஆசான் மதுரை ராஜேந்திரன் தாக்கல் செய்த வழக்கு தள்ளுபடி செய்யப்படுகிறது. தயாரிப்பு நிறுவனமான லைகா புரொடக்சன் பதில் மனுவை நீதிமன்றம் ஏற்றுக்கொள்ளாமல் நிராகரிப்பு செய்கிறது என மதுரை மாவட்ட 4வது கூடுதல் உரிமையியல் நீதிமன்ற நீதிபதி செல்வ மகேஸ்வரி தீர்ப்பு வழங்கினார்.
இயக்குநர் ஷங்கர் தரப்பு வழக்கறிஞர் சாய் குமரன் கூறுகையில், "இந்தியன் 2 படம் திட்டமிட்டபடி கோலாகலமாக வெளியாக உள்ளது. இந்தியன் 2 படத்தை வெளியிட தடை கோரிய வழக்கை நீதிமன்றம் தள்ளுபடி செய்தது மகிழ்ச்சி அளிக்கிறது. நீதிமன்றத்திற்கு தவறான தகவல்களை அளித்து எங்கள் மீது வழக்கு தொடுத்த மனுதாரர் ராஜேந்திரன் மீது மான நஷ்ட ஈடு வழக்கு தாக்கல் செய்ய உள்ளோம். இயக்குநர் ஷங்கரிடம் ஆலோசனை செய்த பின்பு நீதிமன்றத்தில் மான நஷ்ட ஈடு வழக்கு தாக்கல் செய்யப்படும்" எனக் கூறினார்.
மனுதாரர் வர்மக்கலை தலைமை ஆசான் ராஜேந்திரன் தரப்பு வழக்கறிஞர் பிரபு கூறுகையில், "14 வகையான ஆவணங்களுடன் வழக்கை தாக்கல் செய்தோம். உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்வோம்" என கூறினார்.
இதையும் படிங்க: வேட்டையனுடன் கங்குவா, விடாமுயற்சி மோதலா? சரியாக இருக்காது.. வெளிவந்த சீக்ரெட்! - vettaiyan release