மதுரை: கடந்த 2016ஆம் ஆண்டில் மதுரை போதைப்பொருள் தடுப்பு பிரிவு போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது மதுரை - திருச்சி 4 வழிச்சாலை சிட்டம்பட்டி அருகே காரை மறித்து சோதனை செய்தனர். அப்போது காரில் இருந்த 85 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்தனர்.
இந்த சம்பவத்தில் சிலரை கைது செய்தனர். இந்த வழக்கை விசாரித்த விசாரணை நீதிமன்றம், கணேசன் என்பவருக்கு 10 ஆண்டு சிறைத் தண்டனை விதித்தது. இந்த தண்டனையை எதிர்த்து அவர் உயர் நீதிமன்ற மதுரைக்கிளையில் மேல்முறையீடு செய்தார். இந்த நிலையில், இந்த மனு நீதிபதி கே.கே.ராமகிருஷ்ணன் முன்பு விசாரணைக்கு வந்தது.
அப்போது, “நோய்களைக் குணப்படுத்துவதற்கு மருந்துகள் தயாரிக்கப்படுகின்றன. நாளடைவில் இதனை மக்கள் தவறாக பயன்படுத்தினர். அவை போதைப்பொருளாக மாறி சமூகத்துக்கு பெரும் அச்சுறுத்தலாக அமைந்தது. இதனால் போதைப்பொருள் தடைச் சட்டம் இயற்றப்பட்டது.
நம் நாட்டில் 10 முதல் 17 வயதுடைய சிறுவர்கள் 1 கோடியே 85 லட்சம் இளம் சிறார்கள் போதைக்கு அடிமையாகி இருப்பதாக புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன. போதையில் பல்வேறு குற்றச் சம்பவங்களிலும், தற்கொலைகளிலும் ஈடுபடுகின்றனர். போதைக்கு அடிமையானவர்கள் தற்கொலை செய்து கொள்வது ஆண்டுக்கு ஆண்டு அதிகரித்துக்கொண்டே வருகிறது.
இதை தடுக்க உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டியது அவசியமாகிறது. மேலும், போதைப்பொருளால் இளைஞர்கள், அப்பாவிகள் பாதிக்கப்படுவதை தடுக்கப்பட வேண்டும். எனவே, பறிமுதல் செய்யப்படும் போதைப்பொருளை கோர்ட்டில் ஒப்படைக்கும்போது, அவற்றை பெற்றுக்கொள்ள வேண்டும். மீண்டும் அவை விற்பனைக்கு செல்லாதபடி அழித்துவிட வேண்டும்.
மேலும், போதைப்பொருள் பறிமுதல் வழக்கில் குற்றச்சாட்டுகளை நிரூபிக்க முடியாத பட்சத்தில், அரசுத் தரப்பினர் பறிமுதல் செய்த போதைப்பொருளை அழிப்பதற்காக மீண்டும் விண்ணப்பித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என உச்ச நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது.
இதை சம்பந்தப்பட்டவர்கள் முறையாக பின்பற்ற வேண்டும். இந்த வழக்கைப் பொறுத்தவரை கஞ்சா கடத்தியது உறுதியாகி உள்ளது. எனவே, மனுதாரரின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்படுகிறது. அவருக்கு விசாரணை நீதிமன்றம் விதித்த தண்டனை உறுதி செய்யப்படுகிறது” என உத்தரவிட்டார்.
இதையும் படிங்க: எத்தியோப்பியாவில் இருந்து ரூ.10 கோடி மதிப்புடைய கொக்கைன் கடத்தல் - சென்னை விமான நிலையத்தில் பறிமுதல்!