மதுரை: தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்கம் மாநில தலைவர் பொ.அய்யாக்கண்ணு, உயர் நீதிமன்ற மதுரைக்கிளையில் மனு ஒன்றினை தாக்கல் செய்திருந்தார். அந்த மனுவில், “எங்கள் விவசாய சங்கத்தின் சார்பில் நாங்கள் போராடுவதை தடுக்கும் நோக்கத்தோடு பல முறை திருச்சி மாநகர காவல் ஆணையர் எங்களை வீட்டைவிட்டு வெளியே வராமல் தடுத்து கைது செய்துள்ளார்.
இந்திய அரசியலமைப்பின் 19வது பிரிவின் கீழ் உத்தரவாதம் அளிக்கப்பட்டுள்ள அவரது சுதந்திரமான நடமாட்டத்திலிருந்து எந்தவொரு நபரையும் தடுக்க வேண்டாம் என்று பதிலளித்த காவல்துறைக்கு நான் தொடர்ந்த வழக்கில் நீதிமன்றம் உத்தரவிட்டது. ஆனால், இந்த உத்தரவுகள் எதுவுமே பின்பற்றாமல், திருச்சியை விட்டு சென்னை, டெல்லி ஆகிய ஊர்களுக்கு புறப்பட தயாரானால், திருச்சி மாநகர் காவல்துறையினர் வீட்டுக் காவலில் வைக்கின்றனர். சுதந்திரமாக நடமாட அனுமதி வழங்க வேண்டும்” என மனுவில் கூறியிருந்தார்.
இந்த நிலையில், இந்த மனு நீதிபதி புகழேந்தி முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது அரசுத் தரப்பில், “இவர்கள் மண்டை ஓடு வைத்தும், ஆற்றில் இறங்கியும் வித்தியாசமாக போராட்டம் நடத்துகின்றனர். இதனால் தேவையற்ற பிரச்னை ஏற்படுகிறது” என வாதிடப்பட்டது.
இதனையடுத்து மனுதாரர் தரப்பில், “இவர் நடந்து முடிந்த நாடாளுமன்றத் தேர்தலில் வாரணாசி தேர்தலில் வேட்புமனு தாக்கல் செய்ய செல்ல இருந்தார். ஆனால், அப்போது வீட்டுக்காவலில் வைக்கப்பட்டார். நீதிமன்ற உத்தரவுகளை மீறி இதுபோன்று வீட்டுக்காவலில் வைப்பது சட்ட விரோதம்” என கூறப்பட்டது.
பின்னர், எதன் அடிப்படையில் விவசாய சங்க நிர்வாகியை வீட்டுக் காவலில் வைக்கின்றனர், இதற்கு என்ன வழிமுறைகளை பின்பற்றுகிறீர்கள் என்பது குறித்து திருச்சி மாநகர் காவல் ஆணையர் பதில் மனுத் தாக்கல் செய்ய உத்தரவிட்ட நீதிபதி புகழேந்தி, வழக்கு விசாரணையை ஜூலை 11ஆம் தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டனர்.
இதையும் படிங்க: பனாரஸ் எக்ஸ்பிரஸ் ரயிலை எடுக்க விடாமல் போராட்டம் நடத்திய விவசாயிகள்.. காரணம் என்ன?