மதுரை: மதுரையைச் சேர்ந்த மணிமாறன் என்பவர், உயர் நீதிமன்ற மதுரைக்கிளையில் பொதுநல மனுவினைத் தாக்கல் செய்து இருந்தார். அதில், “தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் உள்ள பழமையான கோயில்கள், கட்டடங்கள், நீர்நிலைகள், மலைக்குகைகள் மற்றும் நிலங்களில் ஏராளமான கல்வெட்டுகள், பழமையான சிலைகள் பழந்தமிழ் எழுத்துக்களோடு ஏராளமாக கண்டெடுக்கப்பட்டுள்ளன.
இந்த கல்வெட்டுகள் மூலம் தமிழ்நாட்டின் பழமையான வரலாறு, பண்பாடு, வாழ்வியல் முறை தெரிய வந்துள்ளது. இந்நிலையில், கல்வெட்டுகளைப் பாதுகாக்கவும், நகலெடுக்கவும் தொல்பொருள் ஆய்வு மையம் அமைக்கப்பட்டு, சில ஆண்டுகள் சென்னையில் செயல்பட்டது.
அதன்பிறகு, அம்மையம் ஊட்டிக்கு இடமாற்றம் செய்யப்பட்டு, பின்பு மைசூருக்கு மாற்றப்பட்டது. 1890ஆம் ஆண்டு முதல் 65 ஆயிரம் கல்வெட்டுகளிலிருந்து எபிகிராப் முறையில் படியெடுக்கப்பட்ட எஸ்டம்பேஜ் எனும் 1 லட்சம் கல்வெட்டு எழுத்துக்கள் குறித்த நகல்கள் மைசூரில் உள்ளன.
இதில் பெரும்பாலானவை தமிழ் கல்வெட்டுகளிலிருந்து எடுக்கப்பட்டவை. இந்நிலையில், கடந்த 2008ஆம் ஆண்டு மைசூர் கல்வெட்டு அலுவலகம் புதிய கட்டடத்திற்கு மாற்றம் செய்யப்பட்டபோது, ஏராளமான கல்வெட்டுகள், கல்வெட்டு தரவுகள் மற்றும் நகல்கள் சேதமடைந்து பயன்படுத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. மேலும், தமிழகத்தின் பாரம்பரியமிக்க வரலாற்றுத் தகவல்களை வெளிப்படுத்தும் பல கல்வெட்டுகள் காணாமல் போனதாகவும் புகார் எழுந்துள்ளது.
எனவே, மைசூரில் உள்ள தமிழ் கல்வெட்டுகள் மற்றும் தரவுகளின் நகல்களை தமிழகத்திற்கு மாற்ற வேண்டும். மைசூர் கல்வெட்டு மையத்தில் உள்ள தமிழ் கல்வெட்டுகளின் நிலையை அறிக்கையாக வெளியிட வேண்டும். தமிழ் கல்வெட்டுகளைப் பாதுகாக்க இந்திய தொல்பொருள் ஆய்வு மையம் உரிய நிதியை ஒதுக்க வேண்டும். மேலும், தமிழ் கல்வெட்டு தகவல்களை டிஜிட்டல் முறையில் மாற்றம் செய்து பாதுகாக்க வேண்டும்" என குறிப்பிட்டிருந்தார்.
இந்த மனு நீதிபதிகள் கிருஷ்ணகுமார் மற்றும் விஜயகுமார் ஆகியோர் அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, நீதிபதிகள் மத்திய அரசு பதிலளிக்க உத்தரவிட்டு, வழக்கு விசாரணையை 4 வாரங்களுக்கு ஒத்தி வைத்தனர். மேலும், மத்திய அரசு அளிக்கும் பதிலைப் பொறுத்து உரிய உத்தரவு பிறப்பிக்கப்படும் என நீதிபதிகள் தெரிவித்துள்ளனர்.
இதையும் படிங்க: கேரளா முன்னாள் முதலமைச்சர் கருணாகரன் மகள் பாஜகவில் இணைய திட்டம்?