மதுரை: மதுரை மீனாட்சி அம்மன் கோயில் தரப்பில் தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுவில், “மதுரை ஆதீனம் சார்பில், மதுரை மீனாட்சி அம்மன் கோயில் தெற்கு ஆடி விதியில், திருஞான சம்பந்தர் மண்டபம் உள்ளது. அதில், ஆதீனத்தின் சார்பாக கோயிலுக்கு வரும் பக்தர்கள், மாணவர்களுக்கு தேவாரம், திருவாசகம் உள்ளிட்ட சைவ சித்தாந்த பாடல்கள் ஓதுவார்கள் மூலமாக நடத்தப்பட்டு வந்தது. 291வது ஆதினம் இருக்கும் வரை இவை அனைத்தும் நடைபெற்றன.
ஆனால், 292வது அருணகிரிநாதர் ஆதீனம் சன்னிதானமாக இருந்த காலத்தில் இவை நிறுத்தப்பட்டன. இந்த கால கட்டத்தில், திருஞான சம்பந்தர் மண்டபத்தில் எந்த நிகழ்வும் நடைபெறவில்லை. இந்நிலையில், இந்த மண்டபம் கோயிலுக்கு வரும் பக்தர்களுக்கு லட்டு தயார் செய்யும் இடமாக மாற்றப்பட்டுள்ளது. எனவே, மேற்படி மண்டபத்தில் மீண்டும் தேவாரம் பாடசாலை நடத்த ஏதுவாக, தற்போது லட்டு தயாரிக்கும் இடத்தை வேறு இடத்துக்கு மாற்ற வேண்டும்” என்று மனுத் தாக்கல் செய்தார்.
இந்த மனு ஏற்கனவே தனி நீதிபதியிடம் விசாரணைக்கு வந்தபோது, “கோயில் நிர்வாகம் லட்டு தயார் செய்யும் இடத்தை வேறு இடத்துக்கு இடமாற்றம் செய்ய வேண்டும், மேலும் திருஞானசம்பந்தர் மண்டபத்தில் மதுரை ஆதீனம் பாடசாலை நடத்த இடமளிக்க வேண்டும்” என்று உத்தரவிட்டார். இதனை எதிர்த்து மீனாட்சி அம்மன் கோயில் சார்பில் மேல்முறையீட்டு மனுத் தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனு நீதிபதிகள் கிருஷ்ணகுமார் மற்றும் விஜயகுமார் அமர்வில் விசாரணைக்கு வந்தது.
அப்போது, மதுரை மீனாட்சியம்மன் கோயில் நிர்வாகம் லட்டு தயார் செய்யும் இடத்தை வேறு இடத்துக்கு இடமாற்றம் செய்ய வேண்டும் என தனி நீதிபதி பிறப்பித்த உத்தரவுக்கு இடைக்காலத் தடை விதித்து உத்தரவிட்ட நீதிபதிகள், மதுரை ஆதினம் பாடசாலை நடத்த கோயிலுக்குள் வேறு இடத்தை ஏற்பாடு செய்து கொடுக்கலாம் எனத் தெரிவித்து, இது குறித்து மதுரை ஆதீனம் சார்பில் பதில் மனுத் தாக்கல் செய்ய உத்தரவிட்டு, வழக்கு விசாரணையை 4 வாரங்களுக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டனர்.
இதையும் படிங்க: மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை: போன தேர்தலுக்கு அடிக்கல்.. இந்த தேர்தலுக்கு கட்டுமான பூஜை!