மதுரை: நெல்லை பெருமாள் புரத்தைச் சேர்ந்த பாஸ்கர் என்பவர் உயர் நீதிமன்ற மதுரைக்கிளையில் தாக்கல் செய்த நீதிமன்ற அவமதிப்பு வழக்கில், “தூத்துக்குடி மாவட்டம், குமாரகிரி கிராமத்தில் காசினி அம்மாள் என்பவருக்கு, அரசு சார்பில் கடந்த 1969ஆம் ஆண்டு நிலம் ஒதுக்கப்பட்டு, உரிய ஆவணங்கள் வழங்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், இந்த நிலத்தில் காசினியம்மாளும், அவர் கணவரும் விவசாயம் செய்தும், தொடர்ந்து வரி செலுத்தியும் வந்துள்ளனர். இந்தச் சூழலில், அவர்கள் இருவரும் உயிரிழந்ததை தொடர்ந்தும் வரி செலுத்தப்பட்டு வருகிறது.
அதன் பிறகு, சொத்தை பாகப்பிரிவினை செய்வதற்கு காசினியம்மாளின் வாரிசுகள் பட்டா கோரி விண்ணப்பித்தனர். அப்போது காசினி அம்மாளின் நிலம் அரசு புறம்போக்கு என்று வகைப்படுத்தப்பட்டுள்ளதாக தகவல் வெளியானது. மேலும், நிலம் ஒப்படைப்பு 1981ஆம் ஆண்டு ரத்து செய்யப்பட்டு, அரசு புறம்போக்கு என வகைபடுத்தப்பட்டுள்ளது என வருவாய்த்துறை அதிகாரிகளால் தெரிவிக்கப்பட்டது. இதில் அதிர்ச்சி அடைந்த மனுதாரர், உயர் நீதிமன்ற மதுரைக்கிளையில் கடந்த ஆண்டு மனுத்தாக்கல் செய்தார்.
அந்த மனுவை விசாரித்த நீதிபதி, “மனுதாரர்களுக்கு நிலம் ஒதுக்கப்பட்டுள்ளது, முறையாக வரி செலுத்தி வருகிறார், உரிய ஆவணங்களை வைத்துள்ளார், நிலம் ஒப்படைப்பு ரத்து செய்யபடுவதற்கு முன் உரிய நோட்டீஸ் வழங்கவில்லை. எனவே, பட்டா வழங்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று கடந்த 2023ஆம் ஆண்டு உயர் நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டிருந்தது.
உயர் நீதிமன்றம் உத்தரவிட்டும் இது நாள் வரை எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை. எனவே, நில நிர்வாக ஆணையர் உள்ளிட்டோர் மீது நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை எடுக்க வேண்டும்” என கோரி மனுத்தாக்கல் செய்திருந்தார். இந்த மனு நீதிபதி சுவாமிநாதன் முன் இன்று (ஏப்.24) விசாரணைக்கு வந்தது. அப்போது மனுவை விசாரித்த நீதிபதி, பட்டா வழங்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கடந்த 2023ஆம் ஆண்டு உயர் நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டிருந்தது. இது நாள் வரை எந்த வித நடவடிக்கையும் எடுக்கவில்லை.
வழக்கு விசாரணைக்கு வரும்போது கடந்த சில மாதங்களாக நிறைவேற்றுகிறோம் என்று வாய்மொழியாக கூறுகின்றனர். ஆனால், இது நாள் வரை நிறைவேற்றவில்லை. எனவே இதுகுறித்து நில நிர்வாக ஆணையர் நேரில் ஆஜராகி உரிய விளக்கம் அளிக்க வேண்டும் என உத்தரவிட்டு வழக்கு விசாரணையை 4 வாரங்களுக்கு ஒத்திவைத்து உத்தரவிடப்பட்டுள்ளது.