தூத்துக்குடி: தூத்துக்குடி மாவட்டத்தைச் சேர்ந்த குமரன் என்பவர், உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் தாக்கல் செய்த பொதுநல மனுவில், “தூத்துக்குடி மாவட்டத்தைச் சேர்ந்த சுதந்திர போராட்ட வீரர் வ.உ.சிதம்பரனார். இந்தியா சுதந்திரம் பெறுவதற்கு மிகவும் பாடுபட்டவர். இந்தியாவின் கப்பலோட்டிய தமிழன் என்ற பெருமையும் வ.உ.சிதம்பரனாரையே சேரும். வ.உ.சிதம்பரனார், விடுதலைக்காக சுதந்திரப் போராட்டத்தில் தீவிரமாக செயல்பட்டதால் பலமுறை சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
இந்நிலையில், அவர் கோயம்புத்தூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்ட போது, வ.உ.சிதம்பரனாருக்கு செக்கு இழுக்கும் தண்டனை கொடுக்கப்பட்டது. அந்த செக்கு, தற்போது வரை கோயம்புத்தூர் மத்திய சிறையில் சிதம்பரனாரின் நினைவாக வைக்கப்பட்டு பாதுகாக்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில், வ.உ.சிதம்பரனார் இழுத்த செக்கினை பள்ளி, கல்லுாரி மற்றும் பொதுமக்கள் அனைவரும் காணும் வகையில், அவருடைய தியாகத்தை தெரிந்து கொள்ளும் வகையில், வ.உ.சி வாழ்ந்து வந்த நினைவு இல்லம் அமைந்துள்ள, தூத்துக்குடி மாவட்டம் ஒட்டப்பிடாரத்திற்கு மாற்ற வேண்டும்.
இது தொடர்பாக அதிகாரிகளுக்கு மனு அளித்தும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. எனவே, கோவை மத்திய சிறையில் வ.உ.சிதம்பரனாரின் நினைவாக உள்ள செக்கினை, தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள அவர் வாழ்ந்த இல்லத்திற்கு மாற்ற உத்தரவிட வேண்டும்” என கூறியிருந்தார்.இந்த மனு நீதிபதிகள் கிருஷ்ணகுமார் மற்றும் விஜயகுமார் ஆகியோர் முன் விசாரணைக்கு வந்தது.
அப்போது, அரசுத் தரப்பில், “கோவை சிறையில் வ.உ.சி தண்டனை அனுபவித்து இழுத்த செக்கு போன்று, சென்னையிலும் பொதுமக்கள் பார்வைக்கு வைக்கப்பட்டு உள்ளது. பொதுமக்களும் கோவையில் இருந்து செக்கை மாற்ற எதிர்ப்பு தெரிவிக்கின்றனர்” என வாதிட்டார். அப்போது நீதிபதிகள், மனுதாரரின் மனு குறித்து நீதிமன்றம் எந்த உத்தரவும் பிறப்பிக்க இயலாது என்றும், தமிழ்நாடு அரசு இதனை பரிசீலிக்கும் என உத்தரவிட்டு, வழக்கை முடித்து வைத்தனர்.
இதையும் படிங்க: போலீஸ் துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்த பேச்சிதுரையின் தாய் தொடர்ந்த வழக்கு: நெல்லை எஸ்.பி பதிலளிக்க மதுரை ஐக்கோர்ட் உத்தரவு..