மதுரை: விருதுநகர் மாவட்டம் ராஜபாளையத்தைச் சேர்ந்த ராமசந்திரராஜா, கிருஷ்ண மா ராஜா ஆகியோர் உயர் நீதிமன்ற மதுரைக்கிளையில் தாக்கல் செய்த பொது நல மனுக்களில், “விருதுநகர் மாவட்டம், ராஜபாளையம் நகரில் போக்குவரத்து நெரிசலைக் குறைக்கும் வகையில், சங்கரன்கோவில் சாலை - தென்காசி சாலை இணைப்புச் சாலை திட்டத்தை செயல்படுத்த வேண்டும் என வணிகர்கள், பொதுமக்கள் தொடர்ந்து வலியுறுத்தி வந்தனர்.
இந்த திட்டத்தால் தென்காசி, குற்றாலம், கொல்லம் செல்லும் வாகனங்களும், புதிய பேருந்து நிலையம் வரும் பேருந்துகளும் நகருக்குள் வராமல் செல்வதால், சொக்கர் கோயில், காந்தி கலைமன்றம் உள்ளிட்ட பகுதிகளில் போக்குவரத்து நெரிசல் குறையும். இதையடுத்து, புதிய பேருந்து நிலையம் முதல் தென்காசி சாலையில் உள்ள அரசு மருத்துவமனை வரையிலான 2 கிலோ மீட்டர் தொலைவுக்கு சாலை அமைக்க முடிவு செய்யப்பட்டது.
இதற்கான நிலம் கையகப்படுத்துதல் தொடா்பாக விவசாயிகள், பொதுமக்களிடம் கருத்துக் கேட்புக் கூட்டம் வட்டாட்சியர் அலுவலகத்தில் நடைபெற்றது. இந்த நிலையில், இணைப்புச் சாலைக்கு நிலம் கையகப்படுத்துவதற்காக தமிழ்நாடு அரசு ரூ.8.34 கோடி நிதி ஒதுக்கீடு செய்தது.
இந்த நிலையில், இந்த இணைப்புச் சாலை திட்டம், நீர்நிலையை ஒட்டிச் செல்கிறது. மேலும், சுற்றுச்சூழல் முன் அனுமதி பெற வேண்டும். சுற்றுச்சூழல் முன் அனுமதி பெறாமல் அவசர அவசரமாக திட்டத்தை செயல்படுத்துவதால், சங்கரன்கோவில் சாலை - தென்காசி சாலை இணைப்புச் சாலை திட்டத்திற்கு தடை விதிக்க வேண்டும்” என குறிப்பிடப்பட்டிருந்தது.
இந்த நிலையில், இந்த மனு நீதிபதிகள் சுரேஷ் குமார், அருள் முருகன் ஆகியோர் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர் தரப்பில், “இணைப்பு சாலை திட்டம், நீர் நிலையை ஒட்டிச் செல்கிறது. சுற்றுச்சூழல் அமைப்பிடம் முன் அனுமதி பெறவில்லை. எனவே, இந்த திட்டத்திற்கு தடை விதிக்க வேண்டும்” என வாதிடப்பட்டது.
இதனையடுத்து, அரசுத் தரப்பில், “மதுரையில் இருந்து கொல்லத்திற்கு அரசுப் பேருந்துகள் இயக்கப்படுவதால், தற்போதுள்ள மாநில நெடுஞ்சாலை - எஸ்எச் - 41 மற்றும் தேசிய நெடுஞ்சாலை - என்எச் - 744 இடையேயான இணைப்புச் சாலையின் முக்கியம், இதன் அவசியத்தை மட்டுமே கருத்தில் கொள்ள வேண்டும்.
ராஜபாளையம் புறநகர் பகுதியில் அமைந்துள்ள புதிய பேருந்து நிலையத்திற்கு உள்ளே செல்லவும், ராஜபாளையத்தில் இருந்து கொல்லம் செல்லும் பயணிகளை ஏற்றிக் கொண்டு மீண்டும் சாலை மார்க்கத்தில் பயணிக்க வேண்டிய கட்டாயம் உள்ளது. இது குறித்து விரிவான ஆய்வு மேற்கொண்டு, தொழில்நுட்ப வல்லுநர்கள் மூலம் விரிவான திட்ட அறிக்கை தயாரித்ததன் பேரில், முன்மொழியப்பட்ட இணைப்புச் சாலைக்கு, நிர்வாக மற்றும் நிதி அனுமதி வழங்கப்பட்டது.
இணைப்புச் சாலை 2 கிலோமீட்டர் தூரத்திற்கு மட்டுமே உள்ளது .இதற்கு சுற்றுச்சூழல் துறையின் முன் அனுமதி தேவையில்லை. இந்த வழக்கால் இணைப்புச் சாலை திட்டம் தாமதமாகிறது” என வாதிட்டார்.
இதைத் தொடர்ந்து நீதிபதிகள், “சமர்ப்பிக்கப்பட்ட விரிவான திட்ட அறிக்கையின்படி, நெடுஞ்சாலைகள் மற்றும் சிறு துறைமுகங்கள் துறை, 2022ஆம் ஆண்டு மே 2 அன்று இணைப்புச் சாலை திட்டப் பணிக்காக நிலம் கையகப்படுத்துவதற்கு நிர்வாக மற்றும் நிதி அனுமதி வழங்கி உள்ளது.
இணைப்புச் சாலை உருவாக்கத்திற்கு நிலங்களை கையகப்படுத்துவதற்கான நடவடிக்கைகள் முடிந்துள்ளன. பொதுமக்களிடம் கருத்து கேட்பு கூட்டம் நடத்தப்பட்டு உள்ளது. கடந்த 2018ஆம் ஆண்டில் தொடங்கப்பட்டு, 2022, மே 2 அன்று ஒப்புதல் அளிக்கப்பட்ட இந்தத் திட்டம், இந்த வழக்குகளை கருத்தில் கொண்டு இப்போது நிறுத்தப்பட்டுள்ளது.
இந்த திட்டத்தில் மேலும் செயல்படுத்த தாமதிப்பது பொதுமக்களின் நலனுக்கு பாதகமாக அமையும். திட்டச் செலவு அதிகரிக்கும்.
எனவே, இந்த இணைப்புச் சாலை பயன்பாட்டிற்கு வருவது பொதுமக்களின் நலனுக்கு உகந்தது” எனக் கூறி, இந்த மனுக்களை தள்ளுபடி செய்து நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
இதையும் படிங்க: புதுச்சேரி சிறுமி வழக்கு; 500 பக்க குற்றப்பத்திரிகை தாக்கல்! - Puducherry Girl Murder Case