மதுரை: கன்னியாகுமரி மாவட்டம், வெளிகோடு பகுதியைச் சேர்ந்த ஹேமர்லால், உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் மனு ஒன்றைத் தாக்கல் செய்தார். அந்த மனுவில், "கன்னியாகுமரி மாவட்டத்தின் பெரும்பகுதி மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரப் பகுதியில் அமைந்துள்ளது. இந்த மலைப் பகுதியில் பெரும்பாலான பகுதிகளில் குவாரிகள் செயல்படுகின்றன.
இதனால் மேற்குதொடர்ச்சி மலையும், சுற்றுச்சூழலும் பெரிதும் பாதிக்கப்பட்டு வருகிறது. எனவே, கன்னியாகுமரி மாவட்டத்தில் மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய பகுதிகளில் நடக்கும் குவாரி பணிகளைத் தடுத்து நிறுத்துமாறு உத்தரவிட வேண்டும்" என மனுத் தாக்கல் செய்திருந்தார்.
இந்த மனு நீதிபதிகள் டி.கிருஷ்ணகுமார், ஆர்.விஜயகுமார் ஆகியோர் அமர்வு முன்பு இன்று (பிப்.15) விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள், “கன்னியாகுமரி மாவட்டத்தில் எத்தனை குவாரிகளுக்கு உரிமம் வழங்கப்பட்டுள்ளது? மேற்கு தொடர்ச்சி மலையிலிருந்து 30 கிலோ மீட்டர் தூரத்திற்குள் குவாரி உரிமம் வழங்கப்பட்டுள்ளதா?
வரையறுக்கப்பட்ட எல்லைப் பகுதியில் நிபந்தனைகளை மீறி, விதிகளை மீறி அரசு மற்றும் தனியார் இடங்களில் சட்டவிரோத குவாரி நடைபெறுகிறதா? கேரளாவுக்கு கனிமங்கள் கொண்டு செல்ல குத்தகைதாரர்கள் அல்லது உரிமையாளர்களுக்கு போக்குவரத்து அனுமதி வழங்கப்பட்டுள்ளதா? என்பது குறித்து குமரி மாவட்ட ஆட்சியர் வரும் பிப்.21ஆம் தேதி அறிக்கைத் தாக்கல் செய்ய வேண்டும்.
ஆட்சியரின் அறிக்கை திருப்தி தராவிட்டால், கன்னியாகுமரி மாவட்டத்தில் நடைபெற்று வரும் சட்டவிரோத குவாரி குறித்த விசாரணையை வேறு விசாரணை அமைப்புக்கு மாற்றி உத்தரவிடப்படும்” என நீதிபதிகள் உத்தரவில் கூறினர்.
இதையும் படிங்க: “என் கண்கள் கலைக் கண்ணீர் வடிக்கின்றன”.. உதயம் தியேட்டர் மூடப்படுவது குறித்து வைரமுத்து உருக்கம்!