மதுரை: மொழிஞாயிறு தேவநேயப் பாவாணர் பிறந்த ஊரில் மணிமண்டபம் கட்டுவதற்கு உத்தரவிடக் கோரி, தென்காசி மாவட்டத்தைச் சேர்ந்த ஜெப ஜெயவீரன் என்பவர் உயர் நீதிமன்ற மதுரைக்கிளையில் மனுத் தாக்கல் செய்திருந்தார்.
அந்த மனுவில், “தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் அருகே உள்ள கோமதிமுத்துபுரம் கிராமம் மொழிஞாயிறு தேவநேயப் பாவாணர் பிறந்த ஊராகும். தமிழக அரசின் தமிழ் வளர்ச்சி மற்றும் பண்பாட்டுத் துறையின் சார்பாக, கோமதிமுத்துபுரம் கிராமத்தில் மணி மண்டபம் கட்டுவதற்கு ரூ.6 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. கோமதிமுத்துபுரம் அவரது வாரிசுக்கு சொந்தமான இடத்தில் மணிமண்டபம் கட்ட போதுமான நிலம் உள்ளது.
மேலும், மணிமண்டபம் கட்ட குடியரசு தின கிராம சபைக் கூட்டத்தில் ஏகமனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. அப்பகுதியில் மணிமண்டபம் கட்ட சுற்று வட்டாரப் பகுதியில் உள்ள அனைத்து சமுதாய மக்களும் விரும்புகின்றனர். மணிமண்டபம் கட்டுவதற்கு சொந்த ஊரில் ஒரு ஏக்கர் 90 சென்ட் இடம் கிராம மக்கள் சார்பில் வழங்கப்பட்டுள்ளது.
ஆனால், அதிகாரிகள் சங்கரன்கோவில் நகர் பகுதியில் 70 சென்ட் இடத்தில் மணி மண்டபம் கட்டுவதற்கு முயற்சி செய்து வருகின்றனர். எனவே, தேவநேயப் பாவாணர் பிறந்த ஊரான கோமதிமுத்துபுரம் கிராமத்தில் 1 ஏக்கர் 90 சென்ட் இடத்தில் மணிமண்டபம் கட்டித்தர உத்தரவிட வேண்டும்” இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த வழக்கு நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் முன்பாக விசாரணைக்கு வந்தது. அப்போது, வழக்கை விசாரித்த நீதிபதி, தேவநேயப் பாவாணர் மணிமண்டபம் கட்டுவது குறித்து தமிழ்நாடு அரசு விரிவான பதில் அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்டு வழக்கு விசாரணையை ஜூலை 18ஆம் தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டார்.
இதையும் படிங்க: ஊரகப் பகுதிகளில் 'மக்களுடன் முதல்வர்' திட்டத்தை துவக்கி வைத்தார் முதல்வர் மு.க.ஸ்டாலின்!