மதுரை: ராமநாதபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த ஸ்ரீனிவாசன் என்பவர் சென்னை உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில், "ராமநாதபுரம் திருப்புல்லாணி அருள்மிகு ஆதி ஜெகநாதன் கோயிலின் சாமி நகைகள் காணாமல் போனது தொடர்பான வழக்கில் முன்ஜாமீன் வழங்கக் கோரி" மனு ஒன்றினை தாக்கல் செய்திருந்தார்.
இந்த வழக்கானது நீதிபதி புகழேந்தி முன்பாக விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர் தரப்பில், "மனுதாரர் கோயிலின் உள் பணியாளராக D பிரிவின் கீழ் பணியாற்றி வருகிறார். அதற்கான பதிவிடும் பராமரிக்கப்படுவதால் மனுதாரர் நகைகளை எடுத்திருக்க வாய்ப்பில்லை. அவர் மீது தவறுதலாக புகார் அளிக்கப்பட்டுள்ளது" எனத் தெரிவிக்கப்பட்டது.
தொடர்ந்து ராமநாதபுரம் சமஸ்தானம் தரப்பில், "ராமநாதபுரம் சமஸ்தானத்திற்கு உட்பட்டு 111 கோயில்கள் உள்ளன. சாமியின் சிலைகள் ராமநாதபுரம் சமஸ்தானத்தில் உள்ள கருவூல அறையில் வைக்கப்படும். சாவி ஸ்தனிகர்கள் வசமே இருக்கும். ஒவ்வொரு முறை நகையை வெளியே எடுக்கும் போதும், மீண்டும் வைக்கும் போதும் சரிபார்க்கப்பட்டு, பதிவேடும் பராமரிக்கப்பட்டு வருகிறது.
இந்த நிலையில், கடந்த ஆண்டு நகைகள் காணாமல் போனது கண்டுபிடிக்கப்பட்டவுடன் மனுதாரர் அதற்கு பொறுப்பு ஏற்றுக்கொண்டு, ஒப்படைப்பதற்காக கால அவகாசம் கோரினார். ஆனால் 2024 பிப்ரவரி மாதம் வரை ஒப்படைக்கவில்லை. அதன் பின்னரே மார்ச் மாதம் புகார் அளிக்கப்பட்டது.
ஏற்கனவே 2022ஆம் ஆண்டு சாமி நகைக்குப் பதிலாக போலி நகைகளை, அவர் வைத்தது கண்டுபிடிக்கப்பட்டது. அப்போது அவர் மன்னிப்பு கோரியதால் புகார் எதுவும் அளிக்கப்படவில்லை. விடுமுறை காலம் அமர்வில் முன் ஜாமின் பெற்ற நிலையில், விசாரணைக்கு ஒத்துழைப்பு அளிக்கவில்லை" என தெரிவிக்கப்பட்டது.
அதையடுத்து இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி, "இந்த வழக்கில் மனுதாரர் பலிகிடாவாக மாற்றப்படுகிறாரோ? என சந்தேகம் வருகிறது. இதுவரை அந்த புகாரை காவல்துறையினர் முறையாக விசாரிக்கவில்லை. இந்த வழக்கின் விசாரணை முறையான பாதையில் செய்யவில்லை என இந்த நீதிமன்றம் கருதுகிறது.
இந்து சமய அறநிலையத்துறையின் ஆணையர், ராமநாதபுரம் சமஸ்தானத்திற்கு உட்பட்ட கோயில்களில் நகைகள் எவ்வாறு பராமரிக்கப்படுகின்றன? என்பது தொடர்பாகவும், திருப்புல்லாணி ஜெகன்நாதர் கோயிலின் நகைகள் காணாமல் போன விவகாரத்தில் மனுதாரர் ராமநாதபுரம் சமஸ்தானத்திடம் ஒப்புகை கடிதம் வழங்கியுள்ளாரா? என்பது குறித்தும் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும்" என உத்தரவிட்டு, வழக்கு விசாரணையை ஜூலை 11ஆம் தேதிக்கு ஒத்திவைத்தார்.