மதுரை: மதுரையைச் சேர்ந்த மயில்சாமி என்பவர் உயர் நீதிமன்ற மதுரை அமர்வில் பொதுநல மனு ஒன்றினை தாக்கல் செய்தார். அந்த மனுவில், கட்டிட அனுமதி விதிகளை மீறி மற்றும் உரிய அனுமதி இன்றி பல கட்டடங்கள் கட்டப்பட்டுள்ளன. அவர்கள் மீது நடவடிக்கை எடுப்பதற்கு மாவட்ட ஆட்சியர் தலைமையில் உயர்மட்ட கண்காணிப்புக் குழு அமைக்க அரசாணை வெளியிட வேண்டும் என தமிழ்நாடு அரசுக்கு உயர் நீதிமன்ற மதுரை அமர்வு ஏற்கனவே உத்தரவிட்டிருந்தது.
அதன்படி, கடந்த மார்ச் மாதம், நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை அரசாணை வெளியிட்டு, விதிமீறல் மற்றும் அனுமதியற்ற கட்டடங்கள் மீது நடவடிக்கை எடுக்க மாவட்ட ஆட்சித் தலைவர் தலைமையில் உயர்மட்ட கண்காணிப்புக் குழு அமைக்க உத்தரவிடப்பட்டது.
ஆனால், விதி மீறிய கட்டடங்கள் மற்றும் அனுமதியற்ற கட்டடங்கள் அகற்றுவது குறித்து உயர்மட்ட கண்காணிப்புக் குழு அமைக்கப்படவில்லை. மேலும், விதி மீறிய கட்டடங்கள் அகற்றுவது குறித்து புகார்கள் வந்தாலும் நடவடிக்கை எடுக்கவில்லை. எனவே, தமிழ்நாடு அரசு வெளியிட்ட அரசாணையைப் பின்பற்றும் வகையில் உயர்மட்ட கண்காணிப்புக் குழு அமைத்து முறையாக நடைமுறைப்படுத்த உத்தரவிட வேண்டும் என மனுவில் கூறியிருந்தார்.
இந்த வழக்கு நீதிபதிகள் ஆர்.சுப்பிரமணியன் மற்றும் விக்டோரியா கௌரி அமர்வு முன்பாக விசாரணைக்கு வந்தது. இந்த விசாரணையின் போது, உயர்மட்டக் குழு என்பது ஒரு விஷயத்தை நீர்த்துப் போக செய்வதுதான். அதில் உள்ள அதிகாரிகள் ஏதாவது ஒரு காரணத்தைக் கூறி கூட்டத்தில் கலந்து கொள்ள மாட்டார்கள். கூட்டமும் கூடாது என கருத்து தெரிவித்த நீதிபதிகள், அரசாணை நடைமுறைப்படுத்தியது குறித்து அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்டு வழக்கு விசாரணை ஒத்தி வைத்தனர்.
இதையும் படிங்க: துபாய் சென்ற தாய்.. மீண்டும் குழந்தையைக் கேட்டபோது தர மறுத்த உறவினர்கள்.. நெல்லையில் நடந்தது என்ன?