மதுரை: வழக்கறிஞர் ராம்குமார் ஆதித்தன் உயர் நீதிமன்ற மதுரை அமர்வில் மனு ஒன்றைத் தாக்கல் செய்தார். அந்த மனுவில், "திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் ஒவ்வொரு வருடமும் ஐப்பசி மாதம் ஆறு நாட்கள் கந்த சஷ்டி விழா நவ.2ஆம் தேதி துவங்கி நடைபெறும். அதனைத் தொடர்ந்து, 7வது நாள் திருக்கல்யாணம் நிகழ்ச்சி நடைபெறும். இந்த கந்த சஷ்டி விழாவின் போது தினமும் 1 லட்சம் பக்தர்கள் வருவார்கள்.
சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் சாதாரண நாட்களில் கட்டணமின்றி தரிசனம் மற்றும் விரைவு தரிசனமாக ஒரு நபருக்கு ரூ.100 கட்டணமாக வசூல் செய்கிறார்கள். அதே கூட்டம் அதிகமாக உள்ள நாட்களில், கட்டணமின்றி தரிசனம் மற்றும் விரைவு தரிசனம் கட்டணமாக ரூ.200 நிர்ணயம் செய்துள்ளார்கள்.
கடந்த 2018ஆம் ஆண்டு கோயில் நிர்வாகத்தின் வேண்டுகோளுக்கு இணங்க, இந்து சமய அறநிலையத்துறை ஆணையர் கந்த சஷ்டி விழாவின் போது மட்டும் விரைவு தரிசன கட்டணமாக ஒரு நபருக்கு ரூ.1,000, விஸ்வரூப தரிசன கட்டணம் ஒரு நபருக்கு ரூ.2,000 மற்றும் அபிஷேகம் தரிசன கட்டணமாக ஒரு நபருக்கு ரூ.3,000 வசூல் செய்ய உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. ஆனால், அந்த கட்டண உயர்வு அமல்படுத்தப்படவில்லை. கடந்த 2018ஆம் ஆண்டு முதல் 2022ஆம் ஆண்டு வரை திருத்தப்பட்ட கூடுதல் கட்டணம் வசூல் செய்யப்படவில்லை.
கடந்த 2023ஆம் ஆண்டு கந்த சஷ்டியின் போது கூடுதல் கட்டணம் வசூல் செய்யப்பட்டது. விரைவு வரிசை தரிசனக் கட்டணமாக ஒரு நபருக்கு ரூ.1,000 வசூல் செய்தனர். பக்தர்கள் அதனை எதிர்த்து போராட்டம் நடத்தினார்கள். சுமார் 200 பக்தர்கள் கைது செய்யப்பட்டனர். அதனைத் தொடர்ந்து கோயில் நிர்வாகம் கட்டண உயர்வை நிறுத்தி வைத்தது.
இதையும் படிங்க : “சோழர் காலத்தில் இருந்தே இருந்தாலும் ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட வேண்டும்” - உயர் நீதிமன்றம் கருத்து!
இந்நிலையில், வருகிற கந்த சஷ்டியின் போது கூட்டத்தைக் கட்டுப்படுத்த விரைவு வரிசை தரிசனக் கட்டணம் ஒரு நபருக்கு ரூ.1,000 வசூல் செய்ய உள்ளதாகவும், அது குறித்து ஆட்சேபணைகள் அளிக்க கடந்த அக்டோபர் 3ஆம் தேதியன்று இறுதி நாள் என கூறப்பட்டிருந்தது.
கூட்டத்தைக் கட்டுப்படுத்த இவ்வாறு தரிசனத்திற்கு கூடுதல் கட்டணம் நிர்ணயம் செய்வது தவறு. விரதம் இருக்கும் ஏழை பக்தர்கள் கடவுளை தரிசனம் செய்வது மிகவும் கடினமாக இருக்கும். எனவே, கந்த சஷ்டி விழாவின் போது கூடுதல் கட்டணம் வசூல் செய்வதை தடை செய்ய வேண்டும்.
மேலும், சாமி தரிசனங்களுக்கு ஆதார் எண் அடிப்படையில் தரிசன நேரம் குறிப்பிட்டு, முன் கூட்டியே டோக்கன் இணையதளம் மூலம் அளிக்க வேண்டும். கோயில் வளாகத்தில் தரிசன டோக்கன் அளிக்க ஐந்து இடங்களிலாவது தனி கவுண்டர்கள் திறக்க உத்தரவு பிறப்பிக்க வேண்டும் என மனுவில் கூறப்பட்டிருந்தது. இந்த மனு நீதிபதிகள் ஆர்.சுப்பிரமணியன் மற்றும் விக்டோரியா கௌரி ஆகியோர் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது.
இந்த வழக்கை விசாரணை செய்த நீதிபதிகள், சாமி தரிசனத்திற்கு ரூ.1,000, 2,000 என வாங்கினால் ஏழை மக்கள் எவ்வாறு சாமி தரிசனம் செய்வார்கள்? அதிக கட்டணம் ஏன் வைக்கிறீங்க. ஏழைகள் சாமி கும்பிடக் கூடாதா, பணக்காரர்களுக்கு மட்டும் தான் கோயிலா என கேள்வி எழுப்பிய நீதிபதிகள், இந்த மனு குறித்து இந்து சமய அறநிலையத் துறை ஆணையர் மற்றும் தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் உள்ளிட்ட அதிகாரிகள் பதில்மனுத் தாக்கல் செய்ய உத்தரவிட்டு வழக்கு விசாரணையை தேதி குறிப்பிடாமல் நீதிபதிகள் ஒத்தி வைத்தனர்.
ஈடிவி பாரத் தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே க்ளிக் செய்யவும்