மதுரை: திருநெல்வேலியைச் சேர்ந்த முருகன் என்பவர் உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் பொதுநல வழக்கினைத் தாக்கல் செய்திருந்தார். அதில், "பாபநாசத்தில் ஓடும் தாமிரபரணி ஆற்றில் குளித்துவிட்டு பாபநாச சுவாமியை தரிசித்தால் பாவங்கள் நீங்கும் என்பது ஐதீகம். அதோடு இறந்து போனவர்களுக்கும் அங்கு திதி தர்ப்பணம் கொடுக்கும் இடமாகவும் இந்த கோயில் உள்ளது.
தற்போது சிலரின் தவறான வழிகாட்டுதல்களால் பரிகாரம் செய்தவர்கள் தாங்கள் அணிந்திருந்த ஆடைகளை அப்படியே ஆற்றில் விடுவதை வழக்கமாகக் கொண்டுள்ளனர். இதனால் தாமிரபரணி ஆறு முழுவதுமாக மாசடைந்த நிலையில் உள்ளது.
ஆற்றில் குளிக்கச் செல்லும் சிறுவர்கள், பொதுமக்கள் ஆகியோர் துணிகளில் மாட்டி உயிரிழக்கும் நிலை உள்ளது. இதனால் தாமிரபரணி ஆற்றை குடிநீர் ஆதாரமாகக் கொண்டுள்ள மக்களும், வாழ்வாதாரமாகக் கொண்ட உயிரினங்களும் பெரும் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர்.
ஆகவே பாபநாசம் கோயிலில் தர்ப்பணம், திதி போன்றவற்றை செய்வதற்கான உள்கட்டமைப்பு வசதிகளை செய்து தருவதோடு, தாமிரபரணி ஆறு கழிவுகளால் மாசுப்படுவதைத் தடுக்கவும் உத்தரவிட வேண்டும்" என மனுவில் கூறியிருந்தார்.
இந்த வழக்கு உயர் நீதிமன்ற மதுரைக் கிளை நீதிபதிகளான சுரேஷ்குமார், அருள் முருகன் ஆகியோர் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது இருதரப்பு வாதங்களை பதிவு செய்த நீதிபதிகள், "மத நம்பிக்கை அடிப்படையிலான செயல்களுக்குக் கட்டுப்பாடுகளை விதிக்க இயலாது. ஆனால் அவற்றை முறைப்படுத்தலாம். ஆகவே தமிழ்நாடு மாசுக் கட்டுப்பாட்டு வாரியத்தின் செயற்பொறியாளர், திருநெல்வேலி மாவட்ட ஆட்சியர் ஆகியோர் நிபுணர் குழு அமைத்து, தாமிரபரணி ஆறு முழுவதுமாக ஆய்வு செய்து விரிவான அறிக்கையை நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய வேண்டும்" என உத்தரவிட்டு வழக்கு விசாரணையை வரும் ஜூலை 15ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.
இதையும் படிங்க: பக்தர்கள் உணவருந்திய இலையில் அங்கப்பிரதட்சணம் செய்வதற்கு தடை கோரிய வழக்கு; மேலும் ஒருவர் மேல்முறையீடு! - Angapradakshinam on leaves case